நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: மருதாநதி அணைக்கு நீர்வரத்து
அய்யம்பாளையம் மருதாநதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
பட்டிவீரன்பட்டி,
பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையம் மருதாநதி அணை உள்ளது. தாண்டிக்குடி, பன்றிமலை, கே.சி. பட்டி, பண்ணைக்காடு, பாச்சலூர், கடுகுதடி போன்ற மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் இந்த அணைக்கு நீர் ஆதாரமாகும். இந்த அணையின் மொத்த உயரம் 72 அடியாகும்.
இந்த அணையின் மூலமாக நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய 2 தாலுகாக்களை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி போன்ற பேரூராட்சிகளுக்கும், சித்தரேவு, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி போன்ற ஊராட்சிகளுக்கும் இங்கிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணை வறண்டு போய் காட்சியளித்தது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்து வருகின்றது.
சுமார் 30 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கின்றது. அணைக்கு வரும் தண்ணீரை தனியார் சிலர் மோட்டார் மூலமாக உறிஞ்சி வருகின்றனர். இதனை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story