மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து வெட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது


மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து வெட்டிய சம்பவத்தில் 7 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2019 4:15 AM IST (Updated: 21 Sept 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து 2 பேரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன். இவர் கடந்த மே மாதம் 26-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய ஆவரங்காட்டையை சேர்ந்த தங்கமணி (வயது 42) சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் கடந்த 18-ந் தேதியன்று தன்னுடைய நண்பர் கணேசுடன் மோட்டார் சைக்கிளில் மானாமதுரை மரக்கடை வீதியில் சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர்கள், அவர்களை துரத்தினர்.

அப்போது உயிர் தப்புவதற்காக 2 பேரும் அருகில் உள்ள ஒரு அரசு வங்கிக்குள் புகுந்தனர். ஆனால் அந்த கும்பல் விடாமல் இருவரையும் துரத்தி சென்று வங்கிக்குள் புகுந்து வெட்டினர். இதைப்பார்த்த வங்கி காவலாளி செல்லநேரு, துப்பாக்கியால் சுட்டு அந்த கும்பலை விரட்டியதால் தங்கமணி, கணேஷ் உயிர்தப்பினர். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒருவர் காயம் அடைந்த நிலையில், மற்றவர்கள் தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அந்த கும்பலை போலீசார் தேடிவந்தனர். இதையடுத்து ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஊமைத்துரை (57), பூமிநாதன் (38), மச்சம் (60), முருகன் (44), சலுப்பனோடையை சேர்ந்த தங்கராஜ்(40), மச்சக்காளை (49), பிச்சைப்பிள்ளையேந்தலைச் சேர்ந்த முத்துசெல்வம் (31) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story