அதிகாரியுடனான தகராறில் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வக்கீல் கைது


அதிகாரியுடனான தகராறில் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வக்கீல் கைது
x
தினத்தந்தி 21 Sept 2019 4:30 AM IST (Updated: 21 Sept 2019 12:56 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கோ-ஆப்டெக்ஸ் அதிகாரியையும் அவரது மனைவியையும் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக வக்கீல் கைது செய்யப்பட்டார்.

மதுரை,

மதுரை ஆத்திக்குளம், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 37). இவர் நெல்லை மாவட்டம் கோ-ஆப்டெக்சில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசிப்பவர் ஆனந்தகுமார்(42), வக்கீல். இவர்களது வீட்டின் அருகே ஒரு நிலத்தின் வழியாக நடந்து செல்வது தொடர்பாக இவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரியவருகிறது.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தகுமார் வீட்டிற்குள் சென்று ஒரு துப்பாக்கியுடன் வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் துப்பாக்கியை காட்டி வெங்கடேசன், அவரது மனைவியை மிரட்டினாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் அதுபற்றி தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆனந்தகுமாரை பிடித்து, அவர் வைத்திருந்த துப்பாக்கியை கைப்பற்றினார்கள்.

பின்னர் போலீசார் அந்த துப்பாக்கியை ஆய்வு செய்த போது அது பொம்மை துப்பாக்கி என்பதும், வெங்கடேசனை மிரட்டுவதற்காக அதை பயன்படுத்தியதும் தெரியவந்தது. ஆனாலும் அந்த துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர்.

Next Story