மனைவியின் தற்கொலைக்கு காரணமான ஜவுளி வியாபாரிக்கு 2 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு


மனைவியின் தற்கொலைக்கு காரணமான ஜவுளி வியாபாரிக்கு 2 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 20 Sep 2019 11:15 PM GMT (Updated: 20 Sep 2019 8:01 PM GMT)

மனைவியின் தற்கொலைக்கு காரணமான ஜவுளி வியாபாரிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

ஈரோடு,

துடுப்பதி தெற்கு வீதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவருடைய மகள் மைதிலி (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவருடைய மகன் பிரவீன்குமார் (31) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மைதிலியின் பெற்றோர் வரதட்சணையாக 100 பவுன் நகைகள் வழங்கினார்கள். திருமண செலவையும் பெண் வீட்டாரே ஏற்றுக்கொண்டனர். தலைத்தீபாவளிக்கு மாப்பிள்ளைக்கு 2 பவுன் மோதிரம், தலைப்பொங்கலுக்கு 2 பவுன் தங்க காசு ஆகிவையும் மாமனாராகிய அர்ஜூனன் வழங்கினார். திருமணத்துக்கு பின்னர் பிரவீன்குமாரும், மைதிலியும் ஈரோடு தில்லை நகரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். பிரவீன்குமார் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்தன. அப்போதும் அர்ஜூனன் பேரப்பிள்ளைகளுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்தார்.

இந்த நிலையில் கடந்த 18-4-2012 அன்று மைதிலியை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதால், உடனடியாக வரக்கூறி அர்ஜூனனுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக அர்ஜூனனும், அவருடைய மனைவி மலர்மதியும் துடுப்பதியில் இருந்து ஈரோடு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது மைதிலி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததாக பிரவீன்குமாரின் பெற்றோர் தெரிவித்தனர். இதுகுறித்து ஆர்ஜூனன் ஈரோடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதில், பிரவீன்குமார் வரதட்சணை கேட்டு மைதிலியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், அவரை தற்கொலைக்கு தூண்டியதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். அதன்பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர். மேலும் ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த மகளிர் கோர்ட்டு நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில், மைதிலியை அடித்து துன்புறுத்தி, அவர் தற்கொலை செய்ய காரணமாக இருந்த குற்றத்துக்காக ஜவுளி வியாபாரி பிரவீன்குமாருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜர் ஆனார்.

Next Story