மொடக்குறிச்சி அருகே பேராசிரியையிடம் 7½ பவுன் நகை பறித்த கொள்ளையன் கைது


மொடக்குறிச்சி அருகே பேராசிரியையிடம் 7½ பவுன் நகை பறித்த கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 21 Sept 2019 3:45 AM IST (Updated: 21 Sept 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சி அருகே பேராசிரியையிடம் 7½ பவுன் நகை பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

மொடக்குறிச்சி,

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் வெள்ளபெத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி சுதாவானி (வயது 32). பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி மாலை எழுமாத்தூரில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு மொபட்டில் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார். ஆத்திகாட்டுவலசு என்ற இடத்தில் சென்றபோது மொபட் பழுதாகி திடீரென நின்றது. இதனால் மொபட்டை விட்டு சுதாவானி கீழே இறங்கி நின்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபர், என்ன மொபட் ரிப்பேர் ஆகிவிட்டதா? என்று நைசாக பேச்சுக்கொடுத்தார். அதற்கு சுதாவானி பதில் சொல்லும்போது திடீரென அவர் கழுத்தில் கிடந்த 7½ பவுன் தாலிச்சங்கிலியை அந்த மர்ம நபர் வெடுக்கென பறித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் மின்னலாய் மறைந்துவிட்டார்.

சுதாவானி ‘திருடன் திருடன்‘ என கத்தினார். ஆனால் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. இதைத்தொடர்ந்து மொடக்குறிச்சி போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தார்கள்.

இதற்கிடையே எழுமாத்தூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவர் நேற்று காலை அந்த பகுதியில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி தங்கவேலிடம் இருந்து 500 ரூபாயை பறித்து சென்றார். இதுகுறித்து தங்கவேலும் மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை எழுமாத்தூர்-பாசூர் ரோட்டில் பட்டாசுபாளி என்ற இடத்தில் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் ஒருவர் வேகமாக வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வண்டியை நிறுத்தி அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த அஜய் என்கிற வாஜ்பாய் (23) என்பதும், தற்போது அவர் மொடக்குறிச்சியை அடுத்துள்ள பஞ்சலிங்கபுரத்தில் தன்னுடைய தந்தையுடன் வசித்து வருவதும் தெரிந்தது. அவர்தான் கடந்த 13-ந் தேதி பேராசிரியை சுதாவானியிடம் 7½ பவுன் நகையையும், நேற்று காலை தங்கவேலிடம் 500 ரூபாயையும் பறித்தது தெரியவந்தது.

இதைத்தொடந்து அஜயை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 7½ பவுன் தாலிச்சங்கிலியையும், 500 ரூபாயையும் மீட்டார்கள்.

Next Story