பயிர்க்காப்பீட்டு தொகையை விரைவில் வழங்க வேண்டும்: குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தல்
பயிர்க்காப்பீட்டு தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்று நெல்லையில் நேற்று நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணன் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் ஷில்பா பேசியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் இயல்பான மழை அளவு 814.80 மி.மீட்டர் ஆகும். செப்டம்பர் மாதம் வரை இயல்பான மழை அளவு 30.20 மி.மீ. நேற்று முன்தினம் வரை 34.25 மி.மீ. மழை கிடைக்கப் பெற்றுள்ளது. தற்போது அணைகளில் 43 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 50 சதம் நீர் இருப்பு இருந்தது.
நெல்லை மாவட்டத்தில் கார் பருவத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை நெல் 2 ஆயிரத்து 785 எக்டேரும், சிறு தானியங்கள் 3 ஆயிரத்து 107 எக்டேரும், பயறுவகைப் பயிர்கள் 800 எக்டேரும், எண்ணெய்வித்துகள் 667 எக்டேரும், பருத்தி 1,062 எக்டேரும், கரும்பு 1,491 எக்டேர் பரப்பளவிலும் பயிரிடப்பட்டு உள்ளது.
ரசாயன உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிறுவனங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
பிரதம மந்திரி கிசான் மாந்தன் திட்டத்தில் 18 முதல் 40 வயது வரையுள்ள சிறு, குறு விவசாயிகள் மட்டுமே சேர முடியும். விவசாயிகள் தங்கள் வயதுக்கு ஏற்ப ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்த வேண்டும். 60 வயது வரை செலுத்த வேண்டும். 61 வயதில் இருந்து அவர்களுக்கு வாழ்நாள் வரை மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
விவசாயிகள்- இந்த திட்டத்தில் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் சேர்த்துள்ளனர். விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமீயம் தொகையை குறைக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் விவசாயிகளுக்கு வயது வரம்பை உயர்த்த வேண்டும். 40 வயது என்பதை 50 வரை உயர்த்தினால் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
கலெக்டர்- இது மத்திய அரசு திட்டம். இதுபற்றி தமிழக அரசுக்கு தகவல் தெரிவிப்போம்.
விவசாயிகள்:- பயிர்க்காப்பீட்டு தொகை கடந்த 2016-2017 வரை வழங்கப்பட்டு உள்ளது. அதில் ஏராளமான விவசாயிகளின் பெயர் விடுபட்டு உள்ளது. பயிர் காப்பீட்டு தொகை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் கணக்கெடுத்து விரைவில் வழங்க வேண்டும்.
மேலும் பயிர் காப்பீட்டு திட்டம் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் வழங்கப்படுகிறது. இன்சூரன்ஸ் தொகையை மத்திய அரசு ஏற்று வழங்க வேண்டும்.
கலெக்டர்- இந்த திட்டம் பற்றி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. தற்போது நிதி வந்துள்ளதாக கூறுகிறார்கள். அந்த நிதியில் இருந்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகள்:- திருவேங்கடம் பகுதியில் படைப்புழு தாக்குதலுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.5,300 வழங்க வேண்டும். ஆனால் ஒரு ஏக்கருக்கு ரூ.3,500 மட்டும் வழங்கப்பட்டு உள்ளது. 4 ஆயிரம் எக்டேருக்கு சரியாக காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதில் ரூ.60 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்- இதுபற்றி விசாரணை நடத்துவோம்.
விவசாயிகள்- வெங்காயத்துக்கு கடந்த ஆண்டு வரை ஒரு எக்டேருக்கு ரூ.6,500 மானியம் தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மானியத்தை நிறுத்திவிட்டார்கள். இந்த அரசு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மீண்டும் மானியம் வழங்க வேண்டும்.
அதிகாரி- இந்த ஆண்டு நிதி ஒதுக்கவில்லை.
விவசாயிகள்- கரும்பு கொள்முதல் செய்தவர்களுக்கு தனியார் சர்க்கரை ஆலை பணம் வழங்கவில்லை. எங்களுக்கு வழங்க வேண்டிய பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரி- இதுவரை ரூ.10 கோடி வரை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் ரூ.20 கோடி பாக்கி உள்ளது. இந்த மாதத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கலெக்டர்- கரும்பு விவசாயிகளுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக உதவி கலெக்டர் தலைமையில் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.
பின்னர் விவசாயிகள் கலெக்டர் ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
அதில் ஒரு மனுவில், குடிமராமத்து திட்டத்தில் விஜயநாராயணம் குளத்துக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுவரை ரூ.2 கோடி நிதி மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மீதி உள்ள நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
மற்றொரு மனுவில், விஜயநாராயணம் பெரியகுளம் பாசன கால்வாயை பராமரிக்க வேண்டும். அழகநேரிகுளம் மற்றும் சுவிசேஷபுரம் குளங்களில் நீர் தேக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
முன்னதாக கலெக்டர் ஷில்பா, வேளாண்மைத்துறை மூலம் 14 விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்களை வழங்கினார்.
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை முன்னிட்டு வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கம் முன்பு வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் கண்காட்சிகள் வைக்கப்பட்டு இருந்தன.
கூட்டத்தில், நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே, சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், பயிற்சி கலெக்டர் சிவகுருபிரபாகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சத்திய ஜோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story