16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - காதலன் உள்பட 4 பேர் கைது


16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் - காதலன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 21 Sept 2019 4:00 AM IST (Updated: 21 Sept 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவளது காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

விளாத்திகுளம், 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வடக்கு செவல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பால்வேல் மகன் சுரேஷ்குமார் (வயது 20), சின்னசாமி மகன் ராமலிங்கம் (21), பால்ராஜ் மகன் அழகுராஜா (20). ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்தவர் வாழைவெட்டி மகன் ராமச்சந்திரன் (22). இவர்கள் 4 பேரும் நண்பர்கள்.

சுரேஷ்குமார், வேம்பாரில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். மற்ற 3 பேரும் சென்னையில் உள்ள கடைகளில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தனர்.

இந்த நிலையில் விளாத்திகுளத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை சுரேஷ்குமார் காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு சிறுமியின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், இவர்கள் பிரிந்து விட்டனர்.

இதற்கிடையே ராமலிங்கத்துக்கும், அந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. நேற்று முன்தினம் மாலையில் ராமலிங்கம் தன்னுடைய காதலியை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு, விளாத்திகுளம்-வேம்பார் ரோடு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.

அப்போது அங்கு ஏற்கனவே சுரேஷ்குமார், அழகுராஜா, ராமச்சந்திரன் ஆகிய 3 பேரும் தயாராக இருந்தனர். இதனைப் பார்த்து அந்த சிறுமி அதிர்ச்சி அடைந்தார்.

இருந்தபோதும், அங்கு வைத்து 4 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி மயக்கம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார், ராமலிங்கம், ராமச்சந்திரன் ஆகிய 3 பேரும் தண்ணீர் வாங்குவதற்காக, அருகில் உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதற்கிடையே காட்டுப்பகுதிக்கு சிறுமியுடன் சென்ற வாலிபர்களின் நடமாட்டத்தில் சந்தேகம் அடைந்த அந்த வழியாக சென்றவர்கள், விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த சிறுமியை அழகுராஜா கைத்தாங்கலாக அழைத்து வந்தார். சிறுமியை போலீசார் மீட்டனர். அழகுராஜாவையும் பிடித்துக்கொண்டனர்.

இதையடுத்து அந்த சிறுமியை சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவருக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அழகுராஜா அளித்த தகவலின்பேரில் அவருடைய நண்பர்களான சுரேஷ்குமார், ராமலிங்கம், ராமச்சந்திரன் ஆகியோரை போலீசார் பிடித்தனர். பின்னர் 4 பேரையும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார், காதலன் ராமலிங்கம் உள்பட 4 பேரையும் கைது செய்தார்கள். பின்னர் அவர்களை தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story