திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை: தண்டனை பெற்ற 22 பேருக்கு ஜாமீன் - மேல்முறையீடு செய்ய 15 நாள் அவகாசம்


திருவட்டார் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை: தண்டனை பெற்ற 22 பேருக்கு ஜாமீன் - மேல்முறையீடு செய்ய 15 நாள் அவகாசம்
x
தினத்தந்தி 21 Sept 2019 3:45 AM IST (Updated: 21 Sept 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 6½ கிலோ நகை கொள்ளை போன வழக்கில் தண்டனை பெற்ற 22 பேருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. ஜாமீன் பெற்றவர்கள் மேல் முறையீடு செய்ய 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சுமார் 6½ கிலோ தங்க நகைகள் கொள்ளை போனது. இந்த நகைகளை கோவில் தலைமை போத்திகள் (தலைமை பூசாரிகள்), ஊழியர்கள், போத்திகளின் உறவினர்கள் உள்ளிட்டோர் இணைந்து 1974 முதல் 1984-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் கொஞ்சம், கொஞ்சமாக திருடியது 1989-ம் ஆண்டு வெளியில் தெரிய வந்தது. இது தொடர்பாக 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நாகர்கோவில் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கு நடைபெறும்போதே 10 பேர் இறந்துவிட்டனர். திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணன் நம்பூதிரி (வயது 60) என்பவர் இந்த வழக்கில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டார். இதனால் 23 பேர் மீது வழக்கு விசாரணை நடந்து வந்தது. 27 ஆண்டு காலமாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று முன்தினம் மாஜிஸ்திரேட்டு கிறிஸ்டியன் வழங்கினார்.

அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 23 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்புக்கூறி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக தண்டனை விவரங்களை அறிவித்தார். இவர்களில் 6 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் விவரம் வருமாறு (அவரவர்களுக்கான அபராத தொகை அடைப்புக்குறிக்குள் கூறப்பட்டுள்ளது):-

1. திருவட்டாரைச் சேர்ந்த அப்பன் என்ற ஸ்ரீஅய்யப்பன் (வயது 75), (ரூ.50 ஆயிரம்). 2. கோபாலகிருஷ்ணன் (77), (ரூ.3½ லட்சம்). 3. கோபிநாதன் (86), (ரூ.3 லட்சத்து 70 ஆயிரம்). 4. தற்கொலை செய்து கொண்ட கேசவன் போத்தியின் மனைவி கிருஷ்ணாம்பாள் (75), (ரூ.10 ஆயிரம்). 5. முத்துக்குமார் (47), (ரூ.10 ஆயிரம்). 6. முத்துநாயகம் என்ற சிதம்பரம் (61), (ரூ.30 ஆயிரம்). 7. வேலப்பன் நாயர் (73), (ரூ.10 ஆயிரம்). 8. மாத்தூரைச் சேர்ந்த சுப்பிரமணியரு (69), (ரூ.10 ஆயிரம்). 9. தோவாளையைச் சேர்ந்த மகாராஜாபிள்ளை (80), (ரூ.20 ஆயிரம்). 10. குலசேகரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (79), (ரூ.10 ஆயிரம்). 11. நெல்லை மாவட்டம் தச்சநல்லூரைச் சேர்ந்த சங்கரகுற்றாலம் (88), (ரூ.10 ஆயிரம்). 12. கண்ணுமாமூடு பகுதியைச் சேர்ந்த அப்புக்குட்டன் (67), (ரூ.10 ஆயிரம்). 13. நட்டாலம் பகுதியைச் சேர்ந்த குமார் (51), (ரூ.10 ஆயிரம்). 14. மயிலாடுதுறையைச் சேர்ந்த முருகப்பன் (77), (ரூ.10 ஆயிரம்) ஆகிய 14 பேரும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.

1. திருவட்டாரைச் சேர்ந்த சுரேந்திரன் (59), 2. மற்றொரு வழக்கில் கைதாகி புழல் ஜெயிலில் இருக்கும் ஜனார்த்தனன் போத்தி (66), (ரூ.10 ஆயிரம்). 3. மணிகண்டன் நாயர் (56), (ரூ.20 ஆயிரம்). 4. லட்சுமணன் (60), (ரூ.10 ஆயிரம்). 5. செம்பருத்திவிளையைச் சேர்ந்த கேசவராஜூ (62), (ரூ.10 ஆயிரம்). 6. புதுக்கடையைச் சேர்ந்த அய்யப்பன் ஆசாரி (72), (ரூ.10 ஆயிரம்). 7. தேங்காப்பட்டணத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ஆசாரி (69), (ரூ.10 ஆயிரம்). 8. பூட்டேற்றியைச் சேர்ந்த அப்பாவு (75), (ரூ.10 ஆயிரம்). 9. கரமனையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் ஆசாரி என்ற ராஜய்யப்பன் (62) ஆகிய 9 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து தண்டனை வழங்கப்பட்ட 23 பேரில் புழல் சிறையில் இருக்கும் ஜனார்த்தனன் போத்தியைத்தவிர 22 பேரும் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜராகியிருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களது வயது முதிர்வை காரணம் காட்டியும், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களின் காரணமாகவும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அன்று இரவே மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி கிறிஸ்டியன், ஜாமீன் தொகையை செலுத்தி 22 பேரும் 15 நாள் தற்காலிக ஜாமீனில் செல்ல உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து அவர்கள் ஜாமீன் தொகையை செலுத்தி ஜாமீனில் சென்றனர்.

இதையடுத்து அவர்கள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலோ அல்லது ஐகோர்ட்டிலோ நிரந்தர ஜாமீனுக்கான உத்தரவு பெறவும், மேல்முறையீடு செய்வதற்கும் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் யாசின் முபாரக் அலி தெரிவித்தார்.

Next Story