5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் வாழ்ந்த அடையாளம் கண்டுபிடிப்பு - தொல்லியல் துறையினர் ஆய்வு
கொடைக்கானல் தாலுகா அடுக்கம் வனப்பகுதியில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழங்குடியினர் வாழ்ந்த அடையாளங்களை தொல்லியல் துறையினர் ஆய்வு மூலம் கண்டுபிடித்து உள்ளனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் தாலுகா பெருமாள் மலை அருகே சுமார் 15 கி.மீ தொலைவில் அடுக்கம் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியையொட்டியுள்ள அத்திரிபட்டி என்னும் இடத்தில் பழங்குடியின மக்கள் வாழ்ந்த அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு நேற்று தொல்லியல் துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து தொல்லியல் துறை ஆய்வாளர் காந்தி ராஜன் கூறியதாவது:-
இங்கு வாழ்ந்த பழங்குடியின மக்கள் நுழைவு வாயில், ஆட்டுக்கல், அம்மிக்கல் ஆகியவற்றை கருங்கல்லில் வடிவமைத்து பயன்படுத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பொழுதுபோக்கிற்காக பாறைகளில் தாயம், ஆடு-புலி ஆட்டங்களை செதுக்கி விளையாடி வந்துள்ளனர். அடுக்கம் வனப்பகுதியில் அமைந்திருக்கும் பழங்கால நினைவுச் சின்னங்களை ஆராயும்போது இந்த இடத்தில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழங்குடியின மக்கள் வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலின் உண்மை குடிகள் பழங்குடியின மக்களே ஆகும். கொடைக்கானலை சுற்றி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மலையும், காடுகளும் ஆக இருந்த கொடைக்கானல் இவர்கள் வாழ ஏதுவாக அமைந்தது. மலை பகுதியில் கண்டுபிடித்திருக்க கூடிய இந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டதன் மூலம் பல தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தபுகைப்படங்களை அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி முடிவடைந்த பிறகு கீழடி போன்ற அகழாய்வு பணி தொடர வாய்ப்புகள் உள்ளது. இந்த பணி தொடர்ந்தால் தொன்மை வாய்ந்த பல தகவல்கள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story