வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 Sept 2019 3:30 AM IST (Updated: 21 Sept 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அண்ணாதுரை தகவல் தெரிவித்தார். தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர்,

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகிற 30-ந் தேதியுடன் 5 ஆண்டுகள் முடிவடைந்த, முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ்-2, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள்.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை எழுதப்படிக்க தெரிந்தவர் முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து வருகிற 30-ந் தேதியுடன் 1 ஆண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவர்கள் ஆவர். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை. பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் படிப்பவராக இருக்கக்கூடாது. இந்த தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு தமிழகஅரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

10-ம் வகுப்பு தேர்ச்சியின்மை, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600-ம் வழங்கப்படுகிறது. அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் எழுதப்படிக்க தெரிந்த மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600-ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.1,000-ம் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்க இயலாது. தகுதியுடைய பதிவுதாரர்கள் உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, பள்ளி, கல்லூரி அசல் மாற்றுச்சான்று, குடும்ப அட்டை ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வந்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்று கொள்ளலாம்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story