தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதன்முறையாக விவசாயிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை


தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதன்முறையாக விவசாயிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 21 Sept 2019 3:45 AM IST (Updated: 21 Sept 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதன்முறையாக விவசாயிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த டாக்டர்கள் குழுவினருக்கு டீன் குமுதா லிங்கராஜ் பாராட்டு தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் உள்ள மிக பழமையான மருத்துவமனை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாகும். இந்த மருத்துவமனையில் 1,172 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொது மருத்துவம், மூளை நரம்பியல், சிறுநீரகத்துறை, இதய அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சைத்துறை, முடநீக்கியல்துறை, மனநல மருத்துவம், மயக்கவியல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன.

தஞ்சை மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்காக தினமும் ஏராளமானோர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனை ரூ.150 கோடியில் பன்நோக்கு உயர் மருத்துவ சிகிச்சை மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதய நோய் தொடர்பாக சிகிச்சைக்கு வருபவர்களுக்கு பல்வேறு வகையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள போதிய வசதிகள் இல்லாமல் இதுவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருந்து வந்தது. ஆனால் இதய வால்வு அடைப்பு, இதயத்தில் ஓட்டை அடைப்பு போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. தற்போது பன்நோக்கு உயர் மருத்துவ சிகிச்சை மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் போதிய மருத்துவ கருவிகள் கொண்டு வரப்பட்டன.

இதனால் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் முதன்முறையாக விவசாயி ஒருவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது நல்லமுறையில் உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே செங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா(வயது54). விவசாயி. இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதற்கான வசதிகள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்ததால் பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக கருப்பையா கடந்த 12 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இதய அறுவை சிகிச்சை நிபுணர் குமரவேலு தலைமையில் டாக்டர்கள் சாந்தி, குமரன், மாலினி, தீபன் ஆகியோர் கொண்ட குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். 3½ மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் மூலம் கருப்பையா இதயத்தில் இருந்த 2 அடைப்புகள் சரி செய்யப்பட்டன.

பின்னர் அவர் அம்மா காப்பீடு திட்ட சிறப்பு முகாமில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பூர்ணமாக குணம் அடைந்த நிலையில் கருப்பையாவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் குமுதா லிங்கராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர், அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்து முடித்த டாக்டர்கள் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.

அவருடன் மருத்துவ கண்காணிப்பாளர் பாரதி, நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் மற்றும் டாக்டர்கள் உடன் சென்றனர். நல்ல முறையில் குணம் அடைந்ததை தொடர்ந்து கருப்பையா வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் குமுதா லிங்கராஜ் நிருபர்களிடம் கூறும்போது, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முன்பு இதய வால்வில் அடைப்பு, இதயத்தில் ஓட்டை போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய போதிய வசதி இல்லாததால் மதுரை, சென்னை போன்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரூ.150 கோடியில் பன்நோக்கு உயர் மருத்துவ சிகிச்சை மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் போதிய மருத்துவ கருவிகள் எல்லாம் கொண்டு வரப்பட்டுள்ளன. அம்மா மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும்.

ஆனால் அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றார்.

Next Story