சாதியை சொல்லி திட்டியதாக புகார்: திருமணமான ஒரு வாரத்தில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய மனைவி


சாதியை சொல்லி திட்டியதாக புகார்: திருமணமான ஒரு வாரத்தில் காதல் கணவரை சிறைக்கு அனுப்பிய மனைவி
x
தினத்தந்தி 21 Sept 2019 4:15 AM IST (Updated: 21 Sept 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சாதியை சொல்லி திட்டியதாக திருமணமான ஒரு வாரத்தில் காதல் கணவர் மீது போலீசில் அவரது மனைவி புகார் செய்தார். அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சுரேஷ்குமார் (வயது 26). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சோபியா (24). இருவரின் வீடுகளும் அருகருகே இருந்ததால் அடிக்கடி சந்தித்து நட்பாக பேசினர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களது காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இந்தநிலையில், காதல் ஜோடி சுரேஷ்குமார்-சோபியா வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சுரேஷ்குமாரின் பெற்றோர் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் காதலர்கள் கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்தனர். அவர்கள் தனிமையில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர். மேலும், தங்களை பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ? என்றும் காதல் ஜோடி அஞ்சியது.

இதனிடையே, கடந்த வாரம் யாருக்கும் தெரியாமல் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியது. பின்னர் அவர்கள் பழனி முருகன் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்ற அவர்கள், அதன்பிறகு சேலம் திரும்பினர்.

பெற்றோர் வீட்டிற்கு சென்றால் பிரச்சினை ஏற்படும் என்பதால் சேலம் சூரமங்கலம் சின்னப்பன்நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். ஆனால் அந்த சந்தோஷ வாழ்க்கைக்கு இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் பிரச்சினை ஏற்பட்டது.

அதேசமயம், சுரேஷ்குமாரின் குடும்பத்தினருக்கும், சோபியாவுக்கும் இடையே சாதி ரீதியாக பெயரை சொல்லி மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால் சாதி பெயரை கூறி அடிக்கடி சோபியாவை கூறி வந்ததால் அவர் விரக்தி அடைந்துள்ளார். இதனால் மனம் உடைந்தநிலையில் காணப்பட்ட அவர், இனிமேல் கணவருடன் சேர்ந்து வாழ்வது சரியாக இருக்காது என்றும், அவரை விட்டு பிரிந்து விடவும் சோபியா முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும், காதல் கணவர் என்றும் பாராமல் சுரேஷ்குமார் மீது சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாதியை சொல்லி திட்டியதாக சோபியா ஒரு புகார் மனுவை அளித்தார். மேலும், சுரேஷ்குமாரின் தந்தை ஏழுமலை, தாய் மகாலட்சுமி ஆகியோர் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் எஸ்.சி., எஸ்.டி.சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது பெற்றோரை தேடி வருகின்றனர். திருமணம் ஆன ஒரு வாரத்தில் காதல் கணவரை அவரது மனைவியே சிறைக்கு அனுப்பிய விவகாரம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story