டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு


டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 21 Sept 2019 3:45 AM IST (Updated: 21 Sept 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர், 

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் பாசன தேவைக்கு ஏற்ப அதிகரித்தோ அல்லது குறைத்தோ திறக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் கடந்த வாரம் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் பாசன தேவைக்கு ஏற்றவாறு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடந்த 17-ந்தேதி வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. 18-ந்தேதி வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை நீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்கு மொத்தம் வினாடிக்கு 8 ஆயிரத்து 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்படும் நேரங்களில் மேட்டூர் அணையில் இருந்தும் டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அதிகரித்தோ, குறைத்தோ திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 13 நாட்களாக 120 அடியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை அணை நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

Next Story