கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - பொதுமக்களுக்கு கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்


கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - பொதுமக்களுக்கு கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 Sep 2019 10:45 PM GMT (Updated: 20 Sep 2019 10:11 PM GMT)

கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல், 

அரசு அலுவலர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு தினம் அனுசரித்து, விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் வீடுகளில் உள்ள தண்ணீர் சேமிக்கும் சிமெண்டு தொட்டிகள், டிரம்கள், குடங்கள், பாத்திரங்களில் புகுந்து முட்டையிடா வண்ணம் முழுமையாக மூடி வைக்க வேண்டும்.

மேலும் வீடுகளின் உள்ளே மற்றும் பூங்தொட்டிகளில் கொசுப்புழு உற்பத்தி ஆவதை தடுக்கும் பொருட்டு தினசரி அவற்றை சுத்தம் செய்திட வேண்டும். வீட்டிற்கு வெளியே உள்ள பயன்படுத்தப்படாத ஆட்டு உரல், டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் டம்ளர்கள் ஆகியவற்றை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் அவற்றில் மழைநீர் தேங்கி கொசுப்புழு உற்பத்தி ஆவதை தடுத்திட முடியும்.

கொசு ஒழிப்புபணி மேற்கொள்ள வீடு தேடி வரும் தற்காலிக பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் காய்ச்சல் கண்டவர்களின் பட்டியலை அருகாமையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சலை பரிசோதிக்க நவீன பரிசோதனை வசதிகளும் தேவையான மருந்து பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.

எனவே பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டவுடன் தாமதிக்காமல் அருகில் உள்ள அரசினர் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடிச்சென்று உரிய பரிசோதனைகள் செய்து சிகிச்சை பெற வேண்டும்.

மேலும் பொதுமக்கள் காய்ச்சல் ஏற்பட்டால், மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து மாத்திரை பெறுவதையும், போலி மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதையும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story