கட்டிடத்தை புதுப்பிக்கக்கோரி பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை


கட்டிடத்தை புதுப்பிக்கக்கோரி பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 Sept 2019 3:45 AM IST (Updated: 21 Sept 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தி வேலூர் அருகே ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடத்தை புதுப்பிக்கக்கோரி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமத்தி வேலூர், 

பரமத்தி வேலூர் அடுத்துள்ள கூடுதுறையில் மோகனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கூடுதுறை அருகே உள்ள அண்ணாநகர், மங்களமேடு, களிமேடு மற்றும் முனியப்பன் நகர் பகுதிகளில் உள்ள 16 மாணவ, மாணவிகள் வந்து கல்வி பயின்று செல்கின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியை ஒருவரும், ஆசிரியர் ஒருவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்த பள்ளி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில் பள்ளியின் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. பள்ளியின் பின்புறம் வாய்க்கால் உள்ளதால் பள்ளிக்கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பள்ளியின் முன்பு மழைநீர் தேங்கி நிற்பதோடு, மழைநீர் வகுப்பறைக்குள்ளும் செல்வதால் பள்ளிக்குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பள்ளியின் கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளதால் கூடுதுறை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் அருகில் உள்ள இப்பள்ளிக்கு வராமல் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து பாலப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

எனவே கூடுதுறையில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக்கட்டித்தை புதுப்பிக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் பள்ளிக்கல்வித் துறையினருக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் கூடுதுறையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் புதிதாக பள்ளிக்கட்டிடம் கட்டுவதற்கு இடம் தருவதற்கு தயாராக உள்ளார். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை புதிதாக அமைப்பதற்கு முன்பாக, தற்போது உள்ள பள்ளிக்கட்டிடத்தை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று பள்ளியின் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story