கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் காசநோய் மைய கட்டிடம் - கலெக்டர் பிரபாகர் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் காச நோய் மைய கட்டிடத்தை கலெக்டர் பிரபாகர் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட காசநோய் மைய கட்டிடத்தை மக்களின் பயன்பாட்டிற்காக கலெக்டர் பிரபாகர் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
கொடுமையான காசநோயாக கருதப்படும் எம்.டி.ஆர்., எக்ஸ்.டி.ஆர் போன்ற நோய்களை கண்டறியும் வசதி பெருநகரங்களுக்கு இணையாக தற்போது கிருஷ்ணகிரியிலும் செயல்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு மருந்துகளோடு ஊட்டச்சத்து உதவிக்காக மாதம் ரூ. 500 வீதம் சிகிச்சை காலம் முழுவதும் வழங்கப்படுகிறது.
2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத மாவட்டம் என்ற இலக்கை நோக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு சுமார் 2 ஆயிரத்து 500 காசநோயாளிகள் பயனடைகின்றனர். மேலும் இந்த அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.250 செலுத்தி, முழு உடல்பரிசோதனை செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியின் போது நலப்பணிகள் இணை இயக்குனரும், மருத்துவமனை கண்காணிப்பாளருமான டாக்டர். பரமசிவன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர். ஸ்ரீதர், டாக்டர். செல்வி, துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர். கவிதா, தலைமை செவிலியர்கள், காசநோய் பிரிவு துரைமுருகன், நுகர்வோர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சக்தி மனோகரன், சந்திரமோகன், கோபிநாத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story