கும்பகோணம் கோட்டத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.220 கோடி பணப்பயன்கள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்


கும்பகோணம் கோட்டத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.220 கோடி பணப்பயன்கள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்
x
தினத்தந்தி 20 Sep 2019 11:00 PM GMT (Updated: 20 Sep 2019 10:12 PM GMT)

கும்பகோணம் கோட்டத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.220 கோடி பணப்பயன்களை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

கரூர், 

தமிழக அரசு போக்குவரத்துத்துறையின் சார்பில் கும்பகோணம் கோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பயன்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கரூரில் நடைபெற்றது. இதற்கு போக்குவரத்துத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, ஓய்வுபெற்ற 892 பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.219 கோடியே 80 லட்சத்திற்கு காசோலைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற 5,036 பணியாளர்களுக்கு ரூ.1,093 கோடிக்கு பணப்பயன்களை வழங்கும் பணியை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கும்பகோணம் கோட்டத்தில் உள்ள கும்பகோணம், திருச்சி, கரூர், காரைக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மண்டலங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழக போக்குவரத்துத்துறை வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் ஓய்வூதிய பணப்பயனாக ரூ.1,093 கோடி வழங்கியது இதுவே முதன் முறையாகும். மத்திய அரசால் தேசிய அளவில் போக்குவரத்துத்துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்ட 33 விருதுகளில் 9 விருதுகள் தமிழக போக்குவரத்துத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது என்றால் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்து மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

கிட்டத்தட்ட 21,000 பஸ்கள் இரவு, பகலாக இயக்கும் துறை தமிழக போக்குவரத்துத்துறையாகும். மற்ற அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை தினங்கள் இருக்கும். ஆனால் போக்குவரத்துத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை தினம் என்று இல்லை. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் கூட பணிக்குச் சென்று வருகின்றார்கள். நான் தீபாவளிப் பண்டிகையன்று போக்குவரத்துத்துறை ஊழியர்களோடு சென்னை கோயம்பேடு ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில்தான் இருப்பேன். தனியார் பஸ்களை மிஞ்சும் அளவிற்கு அரசு பஸ்கள் புதுப்பொலிவுடன் இயங்கி வருகின்றன. தொலைதூர பஸ்களில் குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. மிக விரைவில் சென்னையில் 50 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளது. விரைவில் குறைவான தூரம் செல்லக்கூடிய பகுதிகளுக்கும் குளிர்சாதன பஸ்கள் இயக்கப்படவிருக்கின்றது.

உலக வெப்பமயமாதலை தடுக்கவேண்டும், சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கக்கூடிய உலக அளவிலான சி-40 என்ற அமைப்பில் இந்தியாவிலேயே முதன்முதலில் கையெழுத்திட்டது தமிழக அரசு தான். அதன் மூலமாக ஜப்பான் நாட்டை சேர்ந்த கே.எப்.டபிள்யு என்ற வங்கியின் மூலம் மிகக் குறைந்த வட்டிவிகிதத்தில் கடனுதவி பெற்று 2,000 மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதில் முதற்கட்டமாக 300 பஸ்கள் வழங்கப்படவுள்ளது. மேலும், மத்திய அரசு தமிழகத்திற்கு 520 மின்சார பஸ்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 820 மின்சார பஸ்கள் ஓராண்டிற்குள் தமிழத்தில் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குனர் பொன்முடி, திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் திருவிகா, நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் தெற்கு நகர செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் கே.சி.எஸ்.விவேகானந்தன், பொதுமேலாளர்கள் குணசேகரன் (கரூர்), அனுசம் (கும்பகோணம்), ராஜ்மோகன் (திருச்சி), ஆறுமுகம் (புதுக்கோட்டை), தசரதன் (நாகப்பட்டினம்) உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story