தமிழக அமைச்சர்களை தேவையில்லாமல் விமர்சிப்பதா? அன்பழகன் எம்.எல்.ஏ. எதிர்ப்பு


தமிழக அமைச்சர்களை தேவையில்லாமல் விமர்சிப்பதா? அன்பழகன் எம்.எல்.ஏ. எதிர்ப்பு
x
தினத்தந்தி 21 Sept 2019 4:45 AM IST (Updated: 21 Sept 2019 4:24 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அமைச்சர்களை தேவையில்லாமல் விமர்சிப்பதா? என்று அமைச்சர் நமச்சிவாயத்துக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தி மொழி பிரச்சினையில் தி.மு.க.வின் இரட்டை வேடம் தற்போது அம்பலம் ஆகியுள்ளது. இந்தி மொழி சம்பந்தமான விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய கருத்தினை திரித்து தமிழகத்தில் அரசியல் ஆதாயத்துக்காக போராட்டத்தை அறிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார். ஒரு மாநிலத்துக்கு கவர்னர் பதவியே வேண்டாம் என்று வலியுறுத்தி வரும் தி.மு.க. கவர்னரை சந்தித்து அவர் அளித்த உறுதி மொழியை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது.

உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் கவர்னர் கட்டளையை ஏற்று வாபஸ் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. மொழி உணர்வை தூண்டி அரசியல் ஆதாயம் தேடுவதுதான் தி.மு.க.வின் வேலை என்பது இந்த போராட்ட வாபஸ் மூலம் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.

ஒரு தலைவன் என்றால் வெற்றி தோல்வியை சகஜமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் தலைவனுக்கு கீழ் உள்ளவர்களும் தலைவர் சொல்வதை கேட்டு செயல்பட வேண்டும். ஆனால் பெயரளவில் ராகுல்காந்தியை தலைவர் பதவியில் அமர்த்திவிட்டு அனைத்து முடிவுகளையும் அடுத்தகட்ட நிர்வாகிகளே எடுத்து செயல்படுத்தினர். தேர்தல் தோல்விக்கு பிறகு ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தபோது ஒரு கருத்தையும் கூறினார்.

அதாவது காங்கிரஸ் கட்சியில் சிதம்பரம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சுயநலமிக்கவர்கள், கட்சி நலனைவிட தங்கள் குடும்ப நலனில் அக்கறை கொண்டவர்கள், என்னை சுதந்திரமாக செயல்பட விடாமல் நிர்ப்பந்தம் செய்து தங்களது மகன்களுக்கு சீட்டு பெறுவதிலேயே குறியாக இருந்தனர் என்றும் வெறுப்படைந்து இக்கருத்தினை தெரிவித்தே பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தான் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும்போது எடுத்துக்கூறினார். உண்மை நிலை இவ்வாறு இருக்க புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தன்னுடைய உயரம் என்னவென்பதே தெரியாமல் தமிழக அமைச்சர்களை தேவையில்லாமல் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் அ.தி.மு.க. அமைச்சர்கள் அரசியல் ரீதியான விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும் என புதுச்சேரியில் இருந்து மிரட்டுகிறார். இவருடைய மிரட்டலுக்கு சாதாரண ஒரு கீழ்மட்ட அ.தி.மு.க. தொண்டன்கூட பயப்படமாட்டான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சிதம்பரம் போன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் செயல்பாடுகளை புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் போன்றோர் நினைவில் கொண்டு அ.தி.மு.க. தலைவர்களைப்பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Next Story