ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 98 பேரின் சான்றிதழ் சரிபார்ப்பு


ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 98 பேரின் சான்றிதழ் சரிபார்ப்பு
x
தினத்தந்தி 22 Sept 2019 4:30 AM IST (Updated: 21 Sept 2019 10:08 PM IST)
t-max-icont-min-icon

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 98 பேரின் சான்றிதழ்களை 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

நாகர்கோவில்,

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் உதித்சூர்யா (வயது 19). இவர் கடந்த 2019–2020–ம் ஆண்டுக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கலந்தாய்வில் பங்கேற்று தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார். இந்த நிலையில் அவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கொடுத்த புகாரின் பேரில் மாணவர் உதித்சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆய்வு

இதுபோன்ற மோசடி வேறு மருத்துவக்கல்லூரிகளில் நடைபெற்றுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய அனைத்து அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளுக்கும் உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரியிலும் ஆய்வு நடந்தது. இதற்காக டீன் பாலாஜிநாதன் உத்தரவின் பேரில் துணை முதல்வர் லியோடேவிட் தலைமையில் முதலாம் ஆண்டு மருத்துவ பேராசிரியர்கள், கல்லூரி இளநிலை நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவினர் கல்லூரியில் ஆய்வு செய்தனர்.

98 மாணவ–மாணவிகள்

அப்போது முதலாம் ஆண்டு மாணவ–மாணவிகளின் சான்றிதழ்கள், நீட் தேர்வின் போது ஒட்டப்பட்ட மாணவர்களின் புகைப்படங்கள், தேர்வுக்குழுவிடம் கொடுத்திருந்த புகைப்படங்கள், கல்லூரிக்கு வருகை தரும் மாணவ–மாணவிகளின் நேரடி உருவம் ஒத்துப்போகிறதா? என்றும், அவர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்கள் சரியாக இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

முதலாம் ஆண்டு மாணவ–மாணவிகள் 100 பேரில் நேற்று முன்தினம் 98 மாணவ– மாணவிகள் கல்லூரிக்கு வருகை தந்திருந்தனர். அவர்களது புகைப்படங்கள், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. 2 பேர் விடுப்பில் இருந்ததால் அவர்களது சான்றிதழ்கள் நாளை (திங்கட்கிழமை) சரிபார்க்கப்படும் என்று ஆய்வுக்குழுவினர் தெரிவித்தனர். காலையில் தொடங்கிய இந்த ஆய்வு மாலை வரை நடந்தது. 98 மாணவ– மாணவிகளின் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்கள் சரியாக இருந்ததாக ஆய்வுக்குழுவினரால் டீன் பாலாஜிநாதனிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் இந்த தகவலை மருத்துவ பல்கலைக்கழக அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


Next Story