புஞ்சைபுளியம்பட்டி அருகே காதலுக்கு தாய் எதிர்ப்பு; தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


புஞ்சைபுளியம்பட்டி அருகே காதலுக்கு தாய் எதிர்ப்பு; தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 22 Sept 2019 4:00 AM IST (Updated: 21 Sept 2019 10:40 PM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி அருகே காதலுக்கு தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள தாசம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுடைய மகன் சூர்யா (வயது 21). இவர் தோட்டத்துக்கு முள்வேலி அமைக்கும் வேலை செய்து வந்தார். பழனியம்மாள் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் சூர்யா ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர் அந்த பெண்ணுடன் பேசி கொண்டிருந்துள்ளார்.

இதற்கு பழனியம்மாள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காதலிக்கக்கூடாது என்று சூர்யாவை கண்டித்துள்ளார். இதனால் சூர்யா மனவேதனையில் இருந்து வந்தார்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சரியாக சாப்பிடாமலும், யாரிடம் பேசாமலும் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு பழனியம்மாள் பக்கத்து வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் சூர்யா தனியாக இருந்துள்ளார்.

அப்போது அவர் கதவை தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு வீட்டின் உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து பழனியம்மாள் வீட்டுக்கு வந்தார். கதவை தட்டி பார்த்தும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார்

அங்கு சூர்யா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை பார்த்து கதறி அழுதார். பின்னர் இதுபற்றி புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story