வட மேற்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை; அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை


வட மேற்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை; அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 22 Sept 2019 4:00 AM IST (Updated: 21 Sept 2019 10:49 PM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழையின் போது எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

விருதுநகர்,

கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வெள்ளம், மற்றும் இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை மீட்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

அனைத்து துறை அலுவலர்களும், ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். அதனடிப்படையில் காவல் துறை சார்பில் மீட்புப்பணி மேற்கொள்ள தகுதி வாய்ந்த காவலர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நிலையிலான ஒரு குழுவினை அமைக்கவும், மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் மூலம் மாவட்ட மற்றும் வட்ட அளவில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஒத்திகை நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். பொதுப்பணித்துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு கட்டிடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, பலவீனமான கட்டிடங்களை கண்டறிந்து அவற்றை சீர் செய்திடவேண்டும்.

நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாலங்கள் மற்றும் சாலைகளை ஆய்வு செய்து, பலவீனமாக உள்ளவற்றை சீர் செய்திடவும், உணவுப்பொருள் வழங்கல் துறையின் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருட்களை தேவையான அளவு முன்கூட்டியே இருப்பு வைத்து வினியோகிக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பலவீனமான நீர்நிலைகளின் கரைகள் மற்றும் மதகுகளை சரிசெய்திடவும், கிராமங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் போது மக்களை காப்பாற்றிட ஊராட்சி செயலருக்கு தக்க வழிமுறைகளை கடைபிடிக்க தேவையான ஆலோசனை வழங்க வேண்டும்.

சுகாதாரத் துறையின் மூலம் தொற்றுநோய் பரவாமல் தடுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வேளாண் துறை மூலம் வெள்ளகாலங்களில் வேளாண்பயிர்கள், தோட்டப்பயிர்கள் மற்றும் இதரப்பயிர்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் கண்டறிந்து அறிக்கை அனுப்பிட வேண்டும். மேலும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் சார்பில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் மழை நீர் தங்குதடையின்றி செல்ல வழிகள் ஏற்படுத்துவதோடு, தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் வெளியேறிட மாற்று வழிகளை ஏற்பாடு செய்திடவும், மீட்புப் பணிகளுக்கான எந்திரங்களை தயார் நிலையில் வைத்திடவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலையில் மிதமான பாதிப்புக்குள்ளாகக்கூடிய 5 இடங்கள் மற்றும் குறைவான பாதிப்புக்குள்ளாகக்கூடிய 97 இடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்டு பாதுகாக்கும் வண்ணம் மாவட்டம் முழுவதும் 121 நிவாரண மையங்கள் அமைக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் ஊராட்சி அளவிலான தேடுதல், மீட்பு மற்றும் நிவாரண முகாம்களில் குடியமர்த்துதல் போன்ற பணிகளுக்கு அனைத்துறை அலுவலர்கள் அடங்கிய 12 ஒருங்கிணைப்பு மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மற்றும் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள 6 மேலாண்மைக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் ஏற்படக்கூடிய இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் பொருட்டு 658 முதன்மை பொறுப்பாளர்களும், 1202 மகளிர் முதன்மை பொறுப்பாளர்களும், கால்நடைகள் பாதுகாப்பிற்கு 164 முதன்மை பொறுப்பாளர்களும், பேரிடர் காலங்களில் சாய்ந்து விழும் மரங்களை அப்புறப்படுத்தவும் பேரிடருக்கு பின்னர் மரங்களை நடவு செய்யவும் 36 முதன்மை பொறுப்பாளர்களும், 56 தன்னார்வ பேரிடர் காவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் மழை வெள்ள காலங்களில் தங்களின் தேவைகளுக்கும், புகார் தெரிவிப்பதற்கும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Next Story