கடலில் வீணாக தண்ணீர் கலப்பதை தடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே 3 இடங்களில் புதிய கதவணைகள்


கடலில் வீணாக தண்ணீர் கலப்பதை தடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே 3 இடங்களில் புதிய கதவணைகள்
x
தினத்தந்தி 21 Sep 2019 11:00 PM GMT (Updated: 21 Sep 2019 6:49 PM GMT)

கடலில் வீணாக தண்ணீர் கலப்பதை தடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே 3 இடங்களில் புதிய கதவணைகள் அமைய இருப்பதாக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகள் பிரிந்து செல்கின்றன. கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் மட்டுமே திறந்து விடப்படும். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கொள்ளிடம் ஆற்றின் தடுப்பணையின் 9 மதகுகள் உடைந்தன. வீணாக கடலில் தண்ணீர் சென்று கலந்தது. தற்போது கொள்ளிடம் ஆற்றின் கீழ் பகுதியில் புதிய தடுப்பணை ரூ.387 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணி தொடங்கி நடந்து வந்த வேளையில், மீண்டும் மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய தடுப்பணை கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விட்டது. கடந்த ஆண்டைபோலவே, இந்த ஆண்டும் கொள்ளிடம் ஆற்றின் உபரிநீர் வீணாக கடலில் சென்று கலந்தது. எனவே, விவசாயிகள் மத்தியில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 50-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் அல்லது கதவணைகள் கட்டி பாசனத்திற்கு நீரை தேக்கி வைக்க வேண்டும் என்றும் அதற்கு அரசு உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசியல் கட்சியினரும் அதே கருத்தை வலியுறுத்தி வந்தனர்.

முதன்மை பொறியாளர் ஆய்வு

இந்தநிலையில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாயனூர் தடுப்பணை மற்றும் முக்கொம்பு மேலணை ஆகிய பகுதிகளுக்கு இடையே கதவணைகள் கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்திட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் கே.ராமமூர்த்திக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, நேற்று மாலை மாயனூர் தடுப்பணை மற்றும் முக்கொம்பு மேலணை பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களை அரசின் பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார். கொள்ளிடம் ஆற்றில் தற்போது தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு விட்டதால், அங்கு இதுவரை புதிய தடுப்பணை கட்டும் பணி எந்த நிலையில் இருக்கிறது? என்றும் ஆய்வு செய்தார். மேலும் கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டும், தற்போதும் எத்தனை டி.எம்.சி. தண்ணீர் உபரியாக சென்றுள்ளது என்றும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அத்துடன் காவிரி ஆறு பாய்ந்து செல்லும் மேலணையின் ஸ்திரத்தன்மை குறித்தும் ஆய்வு செய்தார்.

3 இடங்களில் புதிய கதவணை

பின்னர் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி கூறுகையில், “தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, காவிரி ஆற்றில் வரும் உபரிநீரை சேகரிக்கும் பொருட்டு கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் கிராமம் மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் கிராமங்களுக்கு இடையே காவிரியின் குறுக்கே கதவணை அமைக்கும் திட்டத்துக்கான இடத்தினையும், கரூர் மாவட்டம் குளித்தலை கிராமம் திருச்சி மாவட்டம் முசிறி கிராமங்களுக்கு இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் திட்டத்துக்கான இடத்தையும் ஆய்வு செய்தோம். இதேபோல் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரில் அமைந்துள்ள கதவணையையும், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்துக்கான இடத்தையும் ஆய்வு செய்துள்ளோம். தற்போது திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள பழைய கதவணையை பலப்படுத்தும் பணியையும், புதிதாக ரூ.387 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கதவணை பணிகளையும் ஆய்வு செய்தோம். இதனை தொடர்ந்து அரியலூர், தஞ்சை மாவட்டங்களில் ஆய்வு செய்ய இருக்கிறோம்“ என்று கூறினார்.

இந்த கள ஆய்வுப்பணியின்போது தலைமை பொறியாளர்கள் தனபால்(வடிவமைப்பு ), பொன்ராஜ்(திட்டம்), திருச்சி மண்டல தலைமை பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி, காவிரி வடிநில பாசன மேற்பார்வை பொறியாளர் திருவெற்றிச்செல்வம், காவிரி ஆற்றுப்பாசன கோட்ட பொறியாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story