திருச்சியில் ‘பொம்மை வீடு’ போலீஸ் நிலையங்கள் கண்காட்சி டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்


திருச்சியில் ‘பொம்மை வீடு’ போலீஸ் நிலையங்கள் கண்காட்சி டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 Sep 2019 10:45 PM GMT (Updated: 21 Sep 2019 6:53 PM GMT)

திருச்சியில் ‘பொம்மை வீடு’ போலீஸ் நிலையங்கள் கண்காட்சியை டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

திருச்சி,

திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக புதிதாக பொறுப்பேற்ற பாலகிருஷ்ணன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் போலீசாருக்கும் பொதுமக்களிடமும், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகளிடமும் நேரடியாக தொடர்பு ஏற்படும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து போலீஸ் துறை தொடர்பான பணிகளில் அவர்களுக்கு ஒரு ஈடுபாட்டினை ஏற்படுத்தும் வகையில் ‘பொம்மை வீடு’ போலீஸ் நிலையங்கள் போட்டி நடைபெறும் என டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அறிவித்திருந்தார். திருச்சி சரகத்தில் ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குள்ளும் வசித்து வருகிற இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் போலீஸ் நிலையங்களுடன் ஒரு நேரடி தொடர்பை ஏற்படுத்தும் வகையிலும், போலீஸ் நிலையத்தை அச்சமின்றி அணுகும் வகையில் இந்த போட்டி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங் களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள் தங்கள் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தை மாதிரி கட்டிடமாக அட்டைகள், தெர்மாகோல் மூலம் உருவாக்கினர்.

கண்காட்சி

போலீஸ் நிலையத்தின் மாதிரி தோற்றத்தையும், போலீஸ் நிலைய செயல்பாட்டை விளக்கும் வகை யிலும், குறிப்புகளையும் அதில் இடம்பெற செய்தனர். இதில் பொம்மை வீடு போலீஸ் நிலையங்களின் மாதிரி கட்டிட வடிவமைப்பு பொதுமக்களின் பார்வைக்காக திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் 2 நாட்கள் கண்காட்சியாக வைக்கப்படும் என அறிவிக்கப்பட் டிருந்தது. அதன்படி போலீஸ் நிலையங்களின் மாதிரி கட்டிட வடிவமைப்பு கண்காட்சி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கிவைத்தார். கண்காட்சியில் ஜூனியர், சீனியர் என 2 பிரிவுகளாக பொம்மை வீடு போலீஸ் நிலையங்களின் வடிவமைப்புகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. இந்த வடிவமைப்புகளை பொதுமக்கள் நேற்று ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

இன்றும் நடக்கிறது

இந்த வடிவமைப்புகளுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக இரு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் தாங்கள் பார்வையிட்ட வடிவமைப்புகளில் சிறந்ததை குறிப்பிட்டு வாக்களித்தனர். கண்காட்சி தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இன்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம். கண்காட்சியில் சிறந்த வடிவமைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் அந்த வடிவமைப்புகள் திருச்சி சரகத்தில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட உள்ளது. 

Next Story