‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் எதிரொலி: திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு


‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் எதிரொலி: திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு
x
தினத்தந்தி 21 Sep 2019 11:00 PM GMT (Updated: 21 Sep 2019 6:56 PM GMT)

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் எதிரொலியாக திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது.

திருச்சி,

சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் உதித்சூர்யா (வயது 19). இவர் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கலந்தாய்வில் பங்கேற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் இளங்கலை மருத்துவ படிப்பில் சேர்ந்தார்.

இந்த நிலையில் உதித்சூர்யா, ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான உதித்சூர்யாவை தனிப்படை அமைத்து தேடிவருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவ கல்லூரிகளில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்று சேர்ந்த மாணவ-மாணவிகளின் சான்றிதழ் மற்றும் ஆவணங்களை சரிபார்க்க சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு

அதன்படி, திருச்சி மிளகுபாறையில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த 150 மாணவ- மாணவிகளின் சான்றிதழ் மற்றும் ஆவணங்களை சரிபார்க்க குழு அமைக்கப்பட்டது. மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அர்‌ஷியா பேகம் தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழுவினர் நேற்று கல்லூரி அலுவலகத்தில் மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களை சரிபார்த்தனர்.

அனடாமிக் துறைத்தலைவர் ஆனந்தி, பயோ கெமிஸ்ட்ரி தலைவர் நிர்மலாதேவி, பிசியாலஜி துறைத்தலைவர் சாந்தகுமாரி ஆகியோர் அடங்கிய குழுவினர் சரிபார்ப்பு பணியினை மேற்கொண்டனர்.

திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டில் 67 மாணவர்களும், 83 மாணவிகளும் சேர்ந்துள்ளனர். அவர்களை தனித்தனியாக அழைத்து ‘நீட்’ தேர்வு எழுதியதற்கான ‘ஹால் டிக்கெட்’ மற்றும் அதில் ஒட்டப்பட்டுள்ள புகைப்படம், நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட ஆணை, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று ஆய்வு செய்து சரிபார்க்கப்பட்டது.

3 ஆவணங்களிலும் ஒரே தோற்றம் கொண்ட புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளதா? என்றும், ஏதேனும் மாற்றம் இருக்கிறதா? எனவும் சரிபார்க்கப்பட்டது. சான்றிதழ் சரிபார்க்கப்பட்டதும் சம்பந்தப்பட்ட மாணவ-மாணவி களிடம் கையெழுத்தும் பெறப் பட்டது.

இதர மாணவர்களிடமும் ஆய்வு

இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அர்‌ஷியா பேகம் கூறுகையில், ‘‘சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவின்பேரில் திருச்சி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த 150 மாணவ-மாணவிகளின் கல்விச்சான்று, நீட் தேர்வு எழுதியதற்கான ஹால் டிக்கெட் மற்றும் நேர்காணலின்போது வழங்கப்பட்ட ஆணை ஆகியவற்றில் உள்ள புகைப்படங்கள் ஒரே தோற்றத்தில் உள்ளதா? என ஆய்வு செய்யப்படுகிறது.

முதலாமாண்டு மாணவர்கள் மட்டுமின்றி, நாளை (திங்கட்கிழமை) முதல் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு, 4-ம் ஆண்டு மாணவ-மாணவிகளின் கல்வி சான்று உள்ளிட்ட இதர சான்றுகள் ஆய்வுக்குட்படுத்தப்படும்’’ என்றார்.

Next Story