மாட்டுவண்டி ஏறியதில் உயிரிழப்பு: அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை


மாட்டுவண்டி ஏறியதில் உயிரிழப்பு: அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 21 Sep 2019 10:45 PM GMT (Updated: 21 Sep 2019 7:03 PM GMT)

மாட்டுவண்டி ஏறியதில் உயிரிழப்பு: அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே இளையபெருமாள்நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகள் கவுரி (வயது 45). மனநிலை பாதிக்கப்பட்டவரான இவர் கடந்த 8-ந்தேதி அதே பகுதியில் சாலையோரம் படுத்து தூங்கினார். மறுநாள் காலையில் அவர் இறந்து கிடந்தார். கவுரி இயற்கையாக மரணம் அடைந்ததாக நினைத்த உறவினர்கள், அவருடைய உடலை மயானத்தில் அடக்கம் செய்து விட்டனர். இந்நிலையில் கவுரியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக இளையபெருமாள்நல்லூர் கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) ஆனந்த், மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இளையபெருமாள்நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த கொளஞ்சி(48) மற்றும் அவரது மகன் வீரபாண்டியன்(25) ஆகியோர் மாட்டு வண்டியில் தைல மரங்களை ஏற்றிக்கொண்டு வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த கவுரி மீது மாட்டு வண்டி ஏறிச்சென்றதில், அவர் உயிரிழந்தது, தெரியவந்தது. இதையடுத்து நேற்று ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் முன்னிலையில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், அடக்கம் செய்யப்பட்ட கவுரியின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் அவருடைய உடல் அதே இடத்தில் வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story