அரியலூரில் மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் கலெக்டர் பரிசு வழங்கினார்


அரியலூரில் மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் கலெக்டர் பரிசு வழங்கினார்
x
தினத்தந்தி 21 Sep 2019 10:30 PM GMT (Updated: 21 Sep 2019 7:07 PM GMT)

அரியலூரில் மாணவ, மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டம் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் போ‌‌ஷன் அபியான் திட்டம் மூலம் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகளுக்கான மினி மாரத்தான் ஓட்டம் நேற்று காலை நடந்தது. அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து மாரத்தான் ஓட்டத்தை, கலெக்டர் டி.ஜி.வினய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 177 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் ஓட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் ஊட்டச்சத்து வார விழா குறித்த வாசகம் அடங்கிய டிசர்ட் ஆகியவற்றை கலெக்டர் வினய் வழங்கினார். மேலும் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற 1-ம் வகுப்பு மாணவியான சிவானி, போட்டி தூரமான 3½ கிலோ மீட்டரை முழுவதுமாக ஓடியதால், அந்த மாணவிக்கு கலெக்டர் சிறப்பு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். இதையடுத்து கலெக்டர் வினய் பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 6 வட்டாரங்களில் ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம், கோலப்போட்டி நடைபெறுகிறது. ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாதவகையில், குழந்தையின் முதல் ஆயிரம் நாட்களின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், ரத்த சோகை இல்லாமல் செய்தல், வயிற்றுப்போக்கை தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல், சுத்தமாக கைக்கழுவும் பழக்கம் மற்றும் சுகாதாரம் பேணுதல், ஊட்டச்சத்து உள்ள உணவுகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாவட்டமாக இந்த மாவட்டத்தைஉருவாக்க வேண்டும், என்றார்.

இதில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) சாவித்திரி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story