இடைத்தேர்தலை சந்திக்க தயார் கூட்டணி குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும் சித்தராமையா பேட்டி
இடைத்தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும், கூட்டணி குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசகோட்டையில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
எதிர்பார்க்கவில்லை
கர்நாடகத்தில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ராஜராஜேஸ்வரி நகர், மாஸ்கி தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறவில்லை. அதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நடைபெற்று வருவதால் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் தான் இடைத்தேர்தல் நடைபெறும் என்று நினைத்திருந்தோம்.
ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக முன்கூட்டியே அக்டோபரிலேயே இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கவில்லை. எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும், அதனை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக தான் இருந்தது. அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தோம்.
முதல்-மந்திரியாக இருந்ததால்...
இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று தேவேகவுடாவும், குமாரசாமியும் தெரிவித்துள்ளனர். காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 14 மாதங்கள் முதல்-மந்திரியாக இருந்ததால், எங்களுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதாக குமாரசாமி அறிவித்திருக்கலாம்.
ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு எடுக்கும். கூட்டணி குறித்து கட்சி மேலிட தலைவர்கள் எங்களுடன் விவாதிப்பார்கள். அப்போது கூட்டணி விவகாரம் தொடர்பாக கட்சி மேலிட தலைவர்களிடம், எங்களது கருத்தையும், முடிவையும் தெரிவிப்போம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story