மதுரையில் கடனுக்காக நிலம் பறிப்பு: பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் கைது


மதுரையில் கடனுக்காக நிலம் பறிப்பு: பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2019 4:15 AM IST (Updated: 22 Sept 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கடனுக்காக நிலம் பறிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் எழும்பூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

மதுரை நடராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் உமாமுருகன். இவர் சொக்கலிங்க நகரில் கணினி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தொழில் அபிவிருத்திக்காக பெத்தானியாபுரத்தை சேர்ந்த தவசி, அவரது மனைவி ராஜேசுவரி, மகள் ராதா தினகரன், ஆரப்பாளையம் பிரேமா ஆகியோரிடம் லட்சக்கணக்கில் பணம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த பணத்தை அவர் திருப்பி கொடுத்து விட்டதாகவும், ஆனால் தவசி குடும்பத்தினர் மேலும் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதாகவும் தெரியவருகிறது. ஆனால் தன்னிடம் பணம் இல்லை என உமாமுருகன் கூறினார்.

இதைதொடர்ந்து தவசி உள்பட 4 பேரும் சேர்ந்து அவரிடம் இருந்து ஒரு நிலத்தை எழுதி வாங்கி கொண்டதாகவும், மற்றொரு நிலத்தின் பத்திரத்தையும் பறித்து வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உமாமுருகன் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தவசி, ராஜேஸ்வரி, ராதா தினகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான ராதா தினகரன், சென்னை எழும்பூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலம் பறிப்பு வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் கைதாகி இருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story