“யாரை எங்கு வைக்க வேண்டும் என மக்களுக்கு நன்றாக தெரியும்” நடிகர் விஜய் மீது அமைச்சர் கடும் தாக்கு
“படம் ஓட வேண்டும் என்பதற்காக நடிகர் விஜய் பரபரப்பாக பேசுவதா? யாரை எங்கு வைக்க வேண்டும் என மக்களுக்கு நன்றாக தெரியும்“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற அனைத்து துறை சார்ந்த பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் நமது மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற அனைத்து பணிகள், திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ளும் வகையில், “முத்து மாவட்டம்“ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த செயலி மூலம் விவசாயிகள், உப்பள தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், தொழில் நிறுவனத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன? என்பதை அறிந்து கொண்டு பயன் பெறலாம். தமிழகத்திலேயே நமது மாவட்டத்தில்தான் முதல் முறையாக இந்த செயலி நடைமுறைக்கு வந்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் ஆன்லைன் டிக்கெட் விற்பனையை நடைமுறைப்படுத்த முடியுமா? என்று துறைரீதியாக பரிசீலித்து வருகிறோம். இதுதொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட வினியோகஸ்தர்களை அழைத்து 2 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்.
முதல்-அமைச்சரிடம் அனுமதி பெற்று, அடுத்த வாரம் எனது தலைமையில், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட வினியோகஸ்தர்கள், உள்துறை செயலாளர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்குபெறும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது அனைத்து திரையரங்குகளிலும் ஆன்லைன் டிக்கெட் விற்பனையை நடைமுறைப்படுத்துவது குறித்து அறிவுறுத்தப்படும். அரசு அவர்களை அழைத்து ஒரு விதிமுறையை சொல்லும்போது, அதை அனைவரும் கடைபிடித்தால் சிறப்பானதாக இருக்கும்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையம் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. அந்த அறிக்கையில் என்னென்ன அம்சங்கள் உள்ளது என்பதை அரசு நிச்சயமாக கவனத்தில் கொள்ளும்.
பேனர் விவகாரம் குறித்து நடிகர் விஜய் பேசி இருக்கிறார். சில நடிகர்கள் தங்களது திரைப்படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக பரபரப்புக்காக ஏதாவது பேசுகின்றனர். அதுபோன்று நடிகர் விஜய்யும் தனது திரைப்படம் நன்றாக ஓட வேண்டும் என்பதற்காக, அறியாமையால் யாருடைய பேச்சை கேட்டு பேசினார் என்பது தெரியவில்லை. அவரது பல திரைப்படங்கள் வெளியாக தமிழக அரசு உதவியது. இது அவரது மனசாட்சிக்கு தெரியும். நாங்கள் யாருக்கும் எந்த வேறுபாடும் பார்ப்பது இல்லை.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது நடிகர் விஜய்யின் “மெர்சல்“ திரைப்படம் வெளியாக தமிழக அரசிடம் உதவி கேட்டு வந்தார். நாங்கள் அவரை முதல்-அமைச்சரிடம் அழைத்து சென்று பேசவில்லை என்றால், “மெர்சல்“ திரைப்படமே வெளியாகி இருக்காது.
கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் மட்டுமல்ல, இந்த ஆண்டு மினி பொதுத்தேர்தல் போன்று நடந்த இடைத்தேர்தலிலும் மக்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து 9 தொகுதிகளில் வெற்றி பெறச்செய்து, ஆட்சியை தொடரச் செய்தனர். எனவே, மக்கள் யாரை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கு சரியாக வைத்திருக்கிறார்கள். யாரை எங்கு வைக்க வேண்டும் என்று, நடிகர் விஜய் போன்றவர்களை கேட்டு, மக்கள் முடிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அது மக்களுக்கு நன்றாக தெரியும். அவ்வாறு விஜய் தன்னை நினைத்து கொண்டால் அது அவரது அறியாமையையே காட்டுகிறது.
அரசியல்வாதிகள் எல்லாம் அரைவேக்காடு என்றால் நடிகர் கமல்ஹாசன் எதற்காக அரசியலுக்கு வந்தார்?. அவர் தன்னைத்தானே அரைவேக்காடு என்று ஒப்பு கொண்டுள்ளார். அவர், அரசின் அலட்சியத்தால் கொலைகள் நடைபெறுகிறது என்று கூறினால், அவர் அரசியல்வாதிகளை குறை சொல்லவில்லை. மாறாக சட்டம், காவல்துறை, நீதிமன்றத்தை குறை சொல்கிறார் என்றுதான் அர்த்தம்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
Related Tags :
Next Story