போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருத்துறைப்பூண்டி நகரம் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் திருத்துறைப்பூண்டி நகரம் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 22 Sept 2019 4:00 AM IST (Updated: 22 Sept 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. எனவே புறவழிச்சாலை அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் உள்ளனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி நகராட்சி உள்ளது. திருத்துறைப்பூண்டி வழியாகத்தான் தஞ்சை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து வேதாரண்யம், கோடியக்கரைக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. திருத்துறைப்பூண்டி நகராட்சி குறைந்த பரப்பளவில் அதிக மக்கள் தொகை கொண்டதாகும்.

இந்த நகராட்சி அருகில் திருத்துறைப்பூண்டி ஒன்றிய பகுதிகளில் மற்றும் 32 ஊராட்சிகளை சேர்ந்த 92 கிராமங்களும் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏதாவது பொருட்கள் வாங்கவேண்டுமானால் பெரிய நகரமான திருத்துறைப்பூண்டிக்குத்தான் வர வேண்டும். மேலும் மருத்துவமனை, கல்லூரி, தாலுகா அலுவலகம் போன்றவற்றுக்கு திருத்துறைப்பூண்டி தான் வர வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

திருத்துறைப்பூண்டி நகரில் உள்ள சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. காரணம் இந்த பகுதியில் உள்ள சாலைகளில் பெரும்பாலும் தரைக்கடைகள் போடப்பட்டுள்ளன. இதனால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றன. சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் சரியாவதற்கு பலமணி நேரம் ஆகிறது.

வாகன பெருக்கத்தால் நாளுக்கு நாள் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. ஏற்கனவே இந்த பகுதியில் ரெயில்வே வழித்தடம் செல்லும் தஞ்சை- திருத்துறைப்பூண்டி சாலையில் மேம்பாலம் இல்லை. இதனால் அந்த பகுதியில் பணிகள் நடைபெற்ற போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புறவழிச்சாலை அமைக்கப்படுமா?

இந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என்றுபொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி நகரிலும் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கு, புறவழிச்சாலை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் புறநகர் பஸ்கள் அந்த வழியாக செல்லும். வாகன நெரிசலும் ஏற்படாது.

திருத்துறைப்பூண்டி நகர மேம்பாட்டு சங்க செயலாளர் டாக்டர் ராஜா கூறுகையில், “புறவழிச்சாலை அமைக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கையகப்படுத்தப்பட்டது. கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கான நிதியும் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னும் பணிகள் தொடங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலையோரங்களில் தரைக்கடைகள் அதிக அளவில் போடப்பட்டுள்ளன. இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே தரைக்கடைகளுக்கு மாற்று இடம் வழங்கி போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும். யார் ஆட்சியாளர்களாக வந்தாலும் திருத்துறைப்பூண்டி கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டி நகரில் பாதாள சாக்கடை வசதி இல்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சாக்கடை வாய்க்கால் தான் தற்போதும் உள்ளது. அதுவும் மோசமான நிலையில் தான் காணப்படுகிறது”என்றார்.

பாதிப்பு இருக்காது

இது குறித்து திருத்துறைப்பூண்டி வக்கீல் அய்யப்பன் கூறுகையில், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரத்தில் இருந்து கடற்கரை சாலை வரையும் புறவழிச்சாலைக்கு இணைப்புக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதே போல வேலூரில் இருந்து திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் மற்றும் கடற்கரை சாலை வரை புறவழிச்சாலை இணைப்புக்கு நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பணிகள் அப்படியே கிடப்பில் உள்ளன. மேலும் வெளியூரில் இருந்து லாரிகள் அதிகமாக வருகின்றன. அதுவும் காலை 6 மணி முதல் 9 மணி வரை வருகின்றன. அவர்கள் அப்படியே சாலை ஓரங்களில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன.

பழைய பஸ் நிலையத்தை சுற்றிலும் 8 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அதிக அளவில் வாகனங்கள் வருகின்றன. எனவே வெளியூரில் இருந்து வரும் லாரிகளை இரவு 9 மணிக்கு மேல் வந்து காலை 6 மணிக்குள் இறக்கி விட்டு செல்லுமாறு அறிவுறுத்தினால் போக்குவரத்து நெரிசல் பாதி குறையும். புறவழிச்சாலை அமைத்தால் வாகனங்கள் அந்த வழியாக செல்லும். திருத்துறைப்பூண்டி நகரில் போக்குவரத்து பாதிப்பு இருக்காது”என்றார்.


Next Story