வேலூர் அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தில் ‘செட்டாப் பாக்ஸ்’ வழங்க மறுப்பதாக ஆபரேட்டர் தீக்குளிக்க முயற்சி


வேலூர் அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தில் ‘செட்டாப் பாக்ஸ்’ வழங்க மறுப்பதாக ஆபரேட்டர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 22 Sept 2019 3:45 AM IST (Updated: 22 Sept 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் உள்ள அரசு கேபிள் டி.வி. அலுவலகத்தில் இலவச ‘செட்டாப் பாக்ஸ்’ வழங்க மறுப்பதாக கூறி கேபிள் டி.வி. ஆபரேட்டர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர், 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை சன்னதி தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவர் அப்பகுதியில் சுமார் 20 ஆண்டுகளாக கேபிள் டி.பி. ஆபரேட்டராக இருந்தார். தற்போது லோகநாதனின் மகன் சசிக்குமார் (வயது 36) அப்பணியை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு கேபிள் டி.வி. நிறுவன அலுவலகத்துக்கு மொபட்டில் சசிக்குமார் வந்தார்.

பின்னர் அவர் மொபட்டில் வைத்திருந்த 5 லிட்டர் பெட்ரோல் கேனுடன் அலுவலகத்தின் உள்ளே வேகமாக நுழைந்தார். அங்கு சசிக்குமார் உடலில் திடீரென பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அலுவலக காவலாளி மற்றும் ஊழியர்கள் உடனடியாக சுதாரித்து அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவர் கையில் இருந்த பெட்ரோல் கேனை பறித்தனர். தொடர்ந்து சசிக்குமார் மீது தண்ணீரை ஊற்றி அமைதிப்படுத்தினர்.

இதுகுறித்து கேபிள் டி.வி. அலுவலக ஊழியர்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் சசிக்குமாரிடம் விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எனது தந்தையும், அவரை தொடர்ந்து நானும் கேபிள் டி.வி. ஆபரேட்டர் தொழில் செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள பல வீடுகளுக்கு அரசு கேபிள் டி.வி.க்கான இலவச ‘செட்டாப் பாக்ஸ்’கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. அவர்கள் தற்போது தனியார் ‘செட்டாப் பாக்ஸ்’ பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனாலும் அரசு ‘செட்டாப் பாக்ஸ்’க்கான மாத வாடகை தொகை எங்களிடம் வசூலிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் அரசின் இலவச ‘செட்டாப் பாக்ஸ்’ கேட்கிறார்கள். அவர்களுக்கு கொடுப்பதற்காக கேபிள் டி.வி. அலுவலகத்தை தொடர்பு கொண்டேன். ஆனால் இதுவரை இலவச ‘செட்டாப் பாக்ஸ்’ தராமல் அலைக்கழித்து வருகின்றனர். ‘செட்டாப் பாக்ஸ்’ வழங்க மறுப்பதால் மனவேதனை அடைந்து தீக்குளிக்க வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்தால் கேபிள் டி.வி. அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் விசாரணைக்காக சசிக்குமாரை ஆட்டோவில் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் இதுகுறித்து அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதுபோன்ற செயலில் மீண்டும் ஈடுபடக்கூடாது என்று சசிக்குமாரை எச்சரிக்கை செய்து அவரின் பெற்றோருடன், போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அரசு கேபிள் டி.வி. தாசில்தார் இளவழகன் கூறுகையில், “கேபிள் டி.வி. ஆபரேட்டர் உரிமம் லோகநாதன் பெயரில் உள்ளது. தற்போது அதனை நடத்தி வரும் சசிக்குமார் நெல்லூர்பேட்டையின் ஒரு பகுதியில் உள்ள சுமார் 250 கேபிள் டி.வி. இணைப்புகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒருவருக்கு ரூ.3,500-க்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த ஒரு பகுதிக்கு 2 பேரும் உரிமம் கொண்டாடி அரசின் இலவச ‘செட்டாப் பாக்ஸ்’ கேட்கிறார்கள். அதனால் 2 பேருக்கும் ‘செட்டாப் பாக்ஸ்’ வழங்கப்படவில்லை. இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து உரிய நபருக்கு ‘செட்டாப் பாக்ஸ்’ வழங்கப்படும்” என்றார்.

Next Story