மழைநீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை காக்க வேண்டும் - கலெக்டர் ராமன் வேண்டுகோள்
மழை நீரை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை காக்க வேண்டுமென, வாழப்பாடி அருகே நடந்த சாரணர் இயக்க பயிற்சி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் சேலம் கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்தார்.
வாழப்பாடி,
சேலம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மூலம், நீர் மேலாண்மை இயக்கமான மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட சாரண, சாரணியர் இயக்க பயிற்சி மையமான வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி சங்கர் பார்க் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு வந்தவர்களை சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி வரவேற்றார்.
மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
புதிய குடியிருப்புகள் அமைத்தல், சாலை விரிவாக்கம் செய்தல், எரிபொருள் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்படுகிறது. மழை பொழிவதற்கு மரங்கள் அத்தியாவசியமாகும்.
ஆனால் மரக்கன்றுகளை நட்டதும் மழை பெய்து விடாது. அழிக்கப்பட்டதை விட கூடுதலாக மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்த்தால் தான் மழை பொழியும். மரம் வளர்ப்பதில் விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
மரம் வளர்ப்பும், மழைநீர் சேகரிப்பும் மனித வாழ்வின் மகத்துவமாகும். பெய்யும் மழை முழுவதும் நிலத்தடி நீராக மாறிவிடுவதில்லை, சிற்றோடைகள், ஆறுகள் வழியாக பாய்ந்து சென்று கடலில் கலந்து விடுகிறது.
ஏரி, குளங்களில் தேங்கும் மழைநீர் ஆவியாகிறது. நிலத்தடி நீர் அடியோடு குறைந்து போனதால், வாழப்பாடி பகுதியில் செழிப்பாக இருந்த பாக்கு, தென்னை மரங்கள் காய்ந்து கருகிவிட்டன.
அனைத்து பகுதிகளிலும் குழிகள் தோண்டி கூழாங்கற்களை கொட்டி மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி காக்கும் பணியில் அனைவரும் ஆர்வத்தோடு ஈடுபட வேண்டும். மரக்கன்றுகள் நடும் விழாவில் ஆர்வத்தோடு கலந்து கொண்ட சாரணர் இயக்க மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் எல்.சுமதி, வாழப்பாடி தாசில்தார் ஜாகீர்உசேன், சேலம் மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் அய்யந்துரை, ஊரக செயலாளர் சரவணன், பேளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருஞானகணேசன், வாழப்பாடி சாரண ஆசிரியர்கள் செல்வம், பாரதி, ராமலிங்கபுரம் வித்யா மந்திர் பள்ளி முதல்வர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story