மாவட்டத்தில் 43 சிறுபாசன குளங்கள், 152 குட்டைகள் தூர்வாரப்படுகிறது - கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் 43 சிறுபாசன குளங்களும், ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் 152 குட்டைகளும் தூர்வாரப்பட்டு வருவதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்,
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. அதன்படி நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நவணி தோட்டக்கூர்பட்டி ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டு வரும் நவணி சின்ன ஏரியை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோல் ரூ.1 லட்சம் மதிப்பில் நவணி சின்ன குட்டையில் நடந்துவரும் குடிமராமத்து திட்டப்பணிகளையும், ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் எஸ்.நாட்டாமங்கலம் ஊராட்சி, குட்டமூக்கன்பட்டியில் சிறுபாசன குளத்தில் நடந்துவரும் மேம்பாட்டு பணிகளையும் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது கலெக்டர் ஆசியா மரியம் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் 43 சிறுபாசன குளங்களும், ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் 152 குட்டைகளும் தூர்வாரப்பட்டு வருகின்றன. புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செட்டிக்காடு புது ஏரிக்குட்டை, லக்கபுரம் நீர்தேங்கும் குட்டை, மூர்த்திநாய்க்கன்பட்டி குட்டை உள்பட 11 குட்டைகளில் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்ட பணிகள் நடந்து வருகிறது.
மேலும் தத்தாத்திரிபுரம் ஊராட்சியில் செம்மங்குளம் ஏரி, நவணி ஊராட்சியில் சின்ன ஏரி, எஸ்.நாட்டாமங்கலம் ஊராட்சியில் குட்டமூக்கன்பட்டி ஏரி உள்ளிட்ட ஏரிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், பிரபாகரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story