தொப்பூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்


தொப்பூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 21 Sep 2019 11:00 PM GMT (Updated: 21 Sep 2019 9:35 PM GMT)

தொப்பூரில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சித்த மருத்துவ பிரிவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு உதவி கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

தமிழக அரசு தொலைநோக்கு பார்வையுடன் மருத்துவம், உயர்கல்வி உள்ளிட்ட துறைகளில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி தொப்பூரில் செயல்பட்டு வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தற்போது 30 படுக்கை வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றப்பட்டு உள்ளது. இதை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் வைரஸ் தொற்றுநோய்களை கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆஸ்பத்திரிகளில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. நிலவேம்பு கசாயத்தை அருந்தி பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். இதற்காக தமிழகஅரசு நிலவேம்பு பொடியை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கி வருகிறது. இதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் நிலவேம்பு கசாயம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பூக்கடை முனுசாமி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் வாசுதேவன், சித்த மருத்துவ அலுவலர் கண்மணி மற்றும் அரசு அலுவலர்கள், டாக்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story