மேட்டுப்பாளையத்தில் கார் கவிழ்ந்து விபத்து செல்போன் கடை உரிமையாளர் பரிதாப சாவு - 4 பேர் படுகாயம்


மேட்டுப்பாளையத்தில் கார் கவிழ்ந்து விபத்து செல்போன் கடை உரிமையாளர் பரிதாப சாவு - 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 22 Sept 2019 4:00 AM IST (Updated: 22 Sept 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், செல்போன் கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மேட்டுப்பாளையம், 

திருப்பூர் இ.பி.காலனியை சேர்ந்தவர் சர்புதீன். இவரது மகன் ஆசிப் (வயது 23). இவர் செல்போன்கடை வைத்து நடத்தி வந்தார். சம்பவத்தன்று இரவு ஆசிப் மற்றும் அவரது நண்பர்கள் திருப்பூர் காந்தி நகர் குமரன் வீதியை சேர்ந்தவர் சம்சுதீன் (வயது 22). இவரும் செல்போன் கடை வைத்துள்ளார். மற்றும் அரவிந்தன்(23), கார்த்திகேயன்(23), சூரியபிரகாஷ்(22) ஆகியோர் மேட்டுப்பாளையத்துக்கு சுற்றுலா செல்ல காரில் புறப்பட்டனர். சூரிய பிரகாசுக்கு சொந்தமான காரை கார்த்திகேயன் ஓட்டினார்.

மேட்டுப்பாளையம்- ஊட்டி மெயின் ரோட்டில் கார் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள தனியார் ரேடியோ கடை முன்பு சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் ரேடியோ கடையின் படிக்கட்டில் மோதி நடுரோட்டில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த ஆசிப் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந் தனர்.

இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஓடிவந்தனர். பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியை சேர்ந்தவர்களின் உதவியுடன் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி தவித்து கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஆசிப் கவலைக்கிடமான நிலையில் இருந்தார். இதனால் அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே ஆசிப் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஊட்டி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் ரோட்டில் காத்திருந்து அவதி அடைந்தனர்.

Next Story