கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் லாரிகள் நேருக்கு நேர் மோதல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்,
பழனியில் இருந்து கொடைக்கானலை நோக்கி கட்டுமான பொருட்கள் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை கொடைக்கானலை சேர்ந்த ஸ்ரீதர் ஓட்டினார். அதேபோல கொடைக்கானலில் இருந்து பழனி நோக்கி ஒரு டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை ரசீது என்பவர் ஓட்டினார்.
கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் பி.எல்.செட் என்ற இடத்தின் அருகே குறுகிய வளைவில் இந்த 2 டிப்பர் லாரிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் லாரிகளின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தன. மேலும் 2 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மலைப்பாதையின் இரு புறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் 2 லாரிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story