வேலைக்கு செல்லும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்க மானியம் - கலெக்டர் அறிவிப்பு
வேலைக்கு செல்லும் பெண்கள் ஸ்கூட்டர் வாங்க மானியம் பெறுவதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,
வேலைக்கு செல்லும் பெண்கள், சிறு வணிகம் செய்யும் பெண்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு, அம்மா இருசக்கர வாகன திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் பெண்கள் ஸ்கூட்டர் வாங்குவதற்கு, அரசே மானியம் வழங்குகிறது. இதில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். இதற்கு சம்பந்தப்பட்ட பெண்கள் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்து இருக்க வேண்டும். அதேபோல் 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேலும் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஏற்கனவே மானியம் பெற்றவர்களுக்கு, மீண்டும் வழங்கப்படாது. இந்த திட்டத்தில் மானியம் பெறுவதற்கு வாகனங்களை சொந்தமாகவோ அல்லது வங்கியின் கடன் மூலமாகவோ வாங்கி கொள்ளலாம். இதையடுத்து வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். அதேநேரம் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு ரூ.31 ஆயிரத்து 250 வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் மானியம் பெறுவதற்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அந்தந்த அலுவலகங்களில் வழங்க வேண்டும்.
மேலும் விண்ணப்பத்துடன் வயது சான்று, இருப்பிட சான்று, சாதிச்சான்று, கல்வி சான்று, வருமான சான்று, வேலை செய்வதற்கு சான்று அல்லது வணிகம் செய்வதற்கான சான்று, ஓட்டுநர் உரிமம் அல்லது பழகுநர் உரிமம் ஆகியவற்றின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைக்க வேண்டும். எனவே, தகுதியுள்ள பெண்கள் ஸ்கூட்டர் மானியத்துக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story