திருப்பத்தூரில் கிடப்பில் போடப்பட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் - விரைவில் முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூரில் பாதாள சாக்கடை பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. மேலும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவில் முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகராட்சி 36 வார்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சுமார் 75 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். திருப்பத்தூர் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்க தமிழக அரசு கடந்த 2015-ம் ஆண்டு முடிவு செய்து, இதற்காக ரூ.110 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன.
இங்குள்ள அனைத்து தெருக்களிலும், பைப்லைன்கள் மற்றும் மேன்ஹோல்கள் பொருத்தப்பட்டு பணிகள் ஆமை வேகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக திருப்பத்தூர் ஜார்ஜ்பேட்டை பகுதியில் கழிவுநீர் நீரேற்று நிலையம் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி இதுவரை முடிவடையாததால், திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்த கூடிய தண்ணீர் வெளியேற வழியில்லாமல் தெருக்களில் வழிந்தோடும் நிலை உள்ளது. பெரும்பாலான வீடுகளில் செப்டிக் டேங்கில் இருந்து கழிவுநீர் பூமிக்குள் நேரடியாக செல்வதால் அப்பகுதி சுற்றிலும் நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபட்டு வருகிறது. எனவே பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப் படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
திருப்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெற்று, அனைத்து பகுதிகளிலும் பைப்லைன் பதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கழிவு நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி முடிவடையாததால், திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் கிடப்பில் உள்ளது. பணியை குறித்த நேரத்தில் முடிக்காததால், தற்போது இந்த திட்டம் செலவு ரூ.150 கோடியை தாண்டியுள்ளது. ஆனாலும் பணிகள் முடியவில்லை. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கழிவுநீர் பிரச்சினையால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பாதாள சாக்கடை திட்டத்தில் தோண்டப்பட்ட 36 வார்டுகளிலும் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி உள்ளது. தொடர் மழையால் அனைத்து சாலைகளும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பல்வேறு விபத்துகள் நடக்கிறது. தார்சாலை போடும் திட்ட பணிக்காக தற்போது ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, தார்சாலைகள் பெயரளவுக்கு மட்டும் போடப்பட்டுள்ளது. முக்கிய தெருக்களான கச்சேரி தெரு, செட்டி தெருவில் இதுவரை தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தார்சாலை குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ரூ.10 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு தார்சாலை போட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்கின்றனர். தார்சாலை போட டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், பாதாள சாக்கடை திட்டத்தில் வீட்டில் இருந்து வெளியே வரும் பாதாள திட்ட கால்வாய் உடன் இணைக்கும் பணிகள் முடிவடையாததால், எங்களால் இதுவரை தார்சாலை அமைக்கப்படவில்லை என கூறுகிறார்.
பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ளும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதில்லை. சப்-கலெக்டர் அலுவலகத்தில் பாதாள சாக்கடை திட்டம் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த ஆய்வு கூட்டம் இதுவரை நடைபெறவில்லை. உடனடியாக மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களை அழைத்து பாதாள சாக்கடை திட்ட பணிகள், தார்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து, தார்சாலைகள் போட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story