சென்னை தங்கும் விடுதியில் சோதனை; 2 கிலோ தங்க நகைகளுடன் 4 பேர் சிக்கினர்


சென்னை தங்கும் விடுதியில் சோதனை; 2 கிலோ தங்க நகைகளுடன் 4 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 22 Sept 2019 3:45 AM IST (Updated: 22 Sept 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

சென்னை யானைகவுனியில் உள்ள தங்கும் விடுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 2 கிலோ தங்க நகைகளுடன் 4 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

பிராட்வே,

தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக போலீசாருக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் பாரிமுனை, பூக்கடை, யானைகவுனி, சவுகார்ப்பேட்டை பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக புகுந்து சோதனையிட்டனர்.

அப்போது யானைகவுனியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இன்றி 2 கிலோ தங்க நகைகளை 4 பேர் வைத்திருந்தது தெரியவந்தது. நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அதனை வைத்திருந்த பூபதி, செந்தில், குமார், திருப்பதி ஆகிய 4 பேரை பிடித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

4 பேரும் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்?, எதற்காக தங்கத்துடன் விடுதியில் தங்கினார்கள்? என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story