பாதாள சாக்கடை பணிக்கு எதிர்ப்பு: சேலத்தில் வியாபாரிகள் சாலை மறியல்
பாதாள சாக்கடை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் கடைவீதியில் ஏராளமான ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பழக்கடைகள் உள்ளிட்டவை உள்ளன. இந்தநிலையில் சின்னக்கடை வீதியில் பாதாள சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு சரிவர மூடாமல் உள்ளன. சாலைகள் படுமோசமாக இருப்பதால் ஆட்டோ உள்ளிட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு முதல் அக்ரஹாரம் பகுதியில் பாதாள சாக்கடைக்காக குழி தோண்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதிகளில் கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் டவுன் போலீசார் மற்றும் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் புண்ணியமூர்த்தி, முத்து ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் வியாபாரிகள் கூறும் போது, ‘தீபாவளி பண்டிகையை நெருங்கும் நேரத்தில் இந்த பணிகளை தொடர்ந்தால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே முதலில் கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பாதாள சாக்கடை பணியை தொடர வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு அவர்களிடம் அதிகாரிகள், ஏற்கனவே இந்த பகுதியில் பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளது. தற்போது அந்த குழி எங்கு உள்ளது என்பதை சோதனை செய்து வருகிறோம். இந்த பணிகளை 4 நாட்களில் முடித்துவிடுவோம்’ என்று கூறினர். இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story