தனிப்பட்ட முறையில் தலைவர்களை விமர்சிப்பதா? தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நாராயணசாமி கண்டனம்


தனிப்பட்ட முறையில் தலைவர்களை விமர்சிப்பதா? தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நாராயணசாமி கண்டனம்
x
தினத்தந்தி 22 Sept 2019 4:45 AM IST (Updated: 22 Sept 2019 4:37 AM IST)
t-max-icont-min-icon

தனிப்பட்ட முறையில் தலைவர்களை விமர்சனம் செய்வதா? என்று தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

சோனியாகாந்தி, ராகுல்காந்தி குறித்து விமர்சித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் ஒரு அமைச்சர் என்ற நிலையை மறந்து நாட்டிற்காக தியாகம் செய்த குடும்பத்தை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல்காந்தியை விமர்சித்துள்ளார். இதை கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய நாட்டின் சட்டப்படி இந்திய நாட்டை சேர்ந்த ஒருவரை மணந்து கொள்ளும் பெண்ணும் நம் நாட்டை சேர்ந்தவராகி விடுகிறார். சோனியாகாந்திக்கு எதிராக அவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்று கூறி பாரதீய ஜனதாவும், சுப்ரமணியசாமியும் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்றனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு சோனியாகாந்தி இந்திய குடியுரிமை பெற்றவர் என்று சொன்னது மட்டுமல்லாமல் அவர் தேர்தலில் நிற்க அனைத்து தகுதிகளும் உள்ளது என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

இது அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தெரியவில்லை. நாட்டு மக்களுக்காகவும், காங்கிரஸ் வளர்ச்சிக்காகவும் பாடுபடும் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை விமர்சனம் செய்வது அமைச்சராக பொறுப்பில் உள்ளவருக்கு அழகல்ல. அமைச்சராக இருந்து கொண்டு மற்ற அரசியல் கட்சி தலைவர்களை தரக்குறைவாக பேசுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த கட்சியின் தலைமை அவரை கண்டிக்கவேண்டும். அதுதான் அரசியல் நாகரிகம்.

ஆனால் அவரை கண்டிக்கவில்லை. அதற்கு பாரதீய ஜனதாவுக்கு ஊதுகுழலாகவும், ஜால்ரா போட்டுக்கொண்டும் அ.தி.மு.க. இருப்பதுதான் காரணம். பாரதீய ஜனதா சொல்வதையெல்லாம் அ.தி.மு.க.வினர் செய்கின்றனர். ஒரு அரசியல் கட்சியை கொள்கை ரீதியாக விமர்சனம் செய்யலாம். ஆனால் தலைவர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை.

இது அநாகரிகமான அரசியல். அ.தி.மு.க.விடம் நாகரிகமான அரசியலை நாம் எதிர்பார்க்க முடியாது. ஜெயலலிதா இருந்தபோது இவர்களெல்லாம் வாயை திறக்கவில்லை. இதுபோன்று அவர்கள் உளறுவார்கள் என்பதற்காக அனைவருக்கும் கட்டுப்பாடு விதித்திருந்தார். ஆனால் இப்போது அந்த கட்டுப்பாடு போய்விட்டது. யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

அதன் வெளிப்பாடாகத்தான் விபரம் தெரியாமல் ராஜேந்திர பாலாஜி பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார். அவர் பேசிய வார்த்தைகளை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுவை காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் புதுவை மாநில மாணவர் காங்கிரஸ் சார்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் சண்முகம், சங்கர், தமிழழகன், தரணிதரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் தமிழக அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Next Story