தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் வேட்புமனு தாக்கல் 27-ந் தேதி தொடங்குகிறது


தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் வேட்புமனு தாக்கல் 27-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 22 Sept 2019 4:42 AM IST (Updated: 22 Sept 2019 4:42 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

மராட்டியம்

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 9-ந் தேதி முடிவடைகிறது.

இதைத்தொடர்ந்து, மராட்டிய சட்டசபைக்கு தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமி‌‌ஷன் தீவிரமாக ஆலோசித்து வந்தது.

இந்த நிலையில், மராட்டிய சட்டசபைக்கு வருகிற அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று டெல்லியில் தலைமை தேர்தல் கமி‌‌ஷனர் சுனில் அரோரா நேற்று அறிவித்தார். அப்போது தேர்தல் கமி‌‌ஷனர்கள் அசோக் லாவாசா, சு‌ஷில் சந்திரா ஆகியோரும் உடன் இருந்தனர்.

இது தொடர்பான தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் கமி‌‌ஷனர் வெளியிட்டார்.

27-ந் தேதி மனுதாக்கல்

அதன்படி, வருகிற 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 4-ந் தேதி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 5-ந் தேதி நடைபெறும். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 7-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

அக்டோபர் 21-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அக்டோபர் 24-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறையும் அமலுக்கு வந்து விட்டன.

வாக்காளர்கள்

மராட்டியத்தில் 8 கோடியே 94 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா 122 இடங்களையும், சிவசேனா 63 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரசுக்கு 42 இடங்கள் கிடைத்தன. தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளில் வெற்றி பெற்றன. மேற்கண்ட அனைத்து கட்சிகளும் தனித்தனியாக தேர்தலை சந்தித்தன. 15 ஆண்டு காலம் கூட்டணி அரசை நடத்தி வந்த காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தோல்வியை தழுவியது.

இதனால் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது.

கூட்டணியாக சந்திப்பு

ஆனால் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் ஒரு அணியாகவும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மற்றொரு அணியாகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் இன்னும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யவில்லை. அநேகமாக இன்று தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், எஞ்சிய 38 தொகுதிகளை கூட்டணியின் சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளன. தேசியவாத காங்கிரஸ் முதல் கட்டமாக 5 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு விட்டது.

தேர்தல் தேதி வெளியாகி விட்டதால், அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்த உள்ளனர்.

அரியானா

இதேபோல் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் அரியானா மாநிலத்தில், 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 2-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

கடந்த முறை அரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா 47 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரசிடம் இருந்து ஆட்சியை பறித்தது. இந்திய தேசிய லோக்தளம் கட்சிக்கு 19 இடங்களும், காங்கிரசுக்கு 15 இடங்களும் கிடைத்தன. இந்த மாநிலத்துக்கும் மராட்டிய சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையில் தேர்தல் நடைபெற உள்ளது. அரியானாவில் 1 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இடைத்தேர்தல்

இரு மாநில சட்டசபை தேர்தலுடன் இந்தியா முழுவதும் 18 மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டசபை தொகுதிகளுக்கும், பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளும் அக்டோபர் 24-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மாநிலங்கள் வாரியாக இடைத்தேர்தல் நடைபெறும் சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை வருமாறு:-

தமிழ்நாடு

தமிழ்நாடு - 2

கர்நாடகம் - 15

உத்தரபிரதேசம் - 11

கேரளா - 5

பீகார் - 5

அசாம் - 4

பஞ்சாப் - 4

குஜராத் - 4

சிக்கிம் - 3

ராஜஸ்தான் - 2

இமாசலபிரதேசம் - 2

புதுச்சேரி, அருணாசலபிரதேசம், சத்தீ‌‌ஷ்கர், தெலுங்கானா, மத்தியபிரதேசம், மேகாலயா மற்றும் ஒடிசா மாநிலங்களில் தலா ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது.

கர்நாடகம்

கர்நாடகத்தில் 15 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும், உத்தரபிரதேசத்தில் எம்.எல்.ஏ.க்களாக இருந்த 11 பேர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.க்கள் ஆகிவிட்டதாலும் காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

பீகார் மாநிலம் சமஸ்திபூர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில் தேர்ந்து எடுக்கப்பட்ட ராம்சந்திர பஸ்வான் (மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் தம்பி) கடந்த ஜூலை மாதம் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

Next Story