காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது - புதுச்சேரி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம்(அக்டோபர்) 21-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
புதுச்சேரி,
புதுச்சேரி கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் புதுவை காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு அடுத்த மாதம்(அக்டோபர்) 21-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட் கிழமை) தொடங்குகிறது. வேட்புமனுக்களை வருகிற 30-ந் தேதி வரை தாக்கல் செய்யலாம். அடுத்த மாதம்(அக்டோபர்) 1-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்களை 3-ந் தேதி வரை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 24-ந் தேதி நடைபெறும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் 27-10-2019 வரை நடைமுறையில் இருக்கும்.
1-1-2019 தேதியை தகுதி பெறும் நாளாக வைத்து தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் 23-6-2019 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி காமராஜ் நகர் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 35,325. இதில் ஆண் வாக்காளர்கள்-17,225. பெண் வாக்காளர்கள்-18,099, மூன்றாம் பாலினம்-1. இந்த வாக்காளர்கள் மட்டுமே காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர்.
இதற்காக இந்த தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் பரிசோதிக்கத்தக்க காகித தணிக்கை எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டையை வைத்து வாக்களிக்கலாம். வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் மாற்று ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிப்பதற்கான அறிவிப்பை பின்னர் வெளியிடும்.
புதுவை பிராந்தியம் முழுவதும் இன்று(நேற்று) முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இது அனைத்து அரசியல் கட்சியினருக்கும், அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்க மாதிரி நன்னடத்தை நெறிகளை அனைவரும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். புதுச்சேரி பொது இடங்கள் பாதுகாப்பு தடை சட்டத்தின் படி, பொதுமக்கள் பார்வைக்கு உள்ள எந்த ஒரு இடங்களிலும் மை, சாக்பீஸ், பெயிண்ட் அல்லது வேறு எதைக்கொண்டோ எழுதவோ, உருமாற்றமோ செய்யக்கூடாது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு உரிமையாளர்களிடம் இருந்து வரும் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை மூலம் வழக்கும் பதிவு செய்யப்படும். தேவைக்கு ஏற்றார் போல் பறக்கும் படைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது துணை தேர்தல் அதிகாரி தில்லைவேலு, சப்-கலெக்டர் சஷ்வத் சவுரவ் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story