மணல்மேடு அருகே, நிழற்குடை அமைக்கப்படாததை கண்டித்து சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


மணல்மேடு அருகே, நிழற்குடை அமைக்கப்படாததை கண்டித்து சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2019 10:45 PM GMT (Updated: 22 Sep 2019 1:33 PM GMT)

மணல்மேடு அருகே நிழற்குடை அமைக்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மணல்மேடு,

மணல்மேடு பேரூராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளான வையாபுரிதிடல், மணல்மேடு போலீஸ் நிலையம் இயங்கி வரும் பஞ்சாலை மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பஸ் நிழற்குடை சேதமடைந்ததால் மணல்மேடு பேரூராட்சியால் இடித்து அகற்றப்பட்டது. இதன்பின் மீண்டும் புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை. 
இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் நிழற்குடை இல்லாமல் மழை மற்றும் வெயில் காலங்களில் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். 

இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதை கண்டித்தும் மணல்மேடு போலீஸ் நிலையத்துக்கு எதிரே வையாபுரிதிடல் பகுதிக்கு செல்லக்கூடிய சாலை பல ஆண்டுகளாக குண்டும் - குழியுமாக கிடப்பதால் இந்த சாலையை சீரமைக்க கோரியும், இப்பகுதியில் பகுதி நேர அங்கன்வாடி மையம் அமைக்க வலியுறுத்தியும் வையாபுரிதிடல், பஞ்சாலை மெயின்ரோடு, பஞ்சாலை தெரு பகுதியை சேர்ந்த 150- க்கும் மேற்பட்ட மக்கள் மயிலாடுதுறை- மணல்மேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் மணல்மேடு போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். சாலை மறியல் போராட்டத்தால் மணல்மேடு - மயிலாடுதுறை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story