அகத்தீஸ்வரர் கோவிலில் ரூ.23 லட்சத்தில் தேர் அமைக்கும் பணி - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் ரூ.23½ லட்சத்தில் தேர் அமைக்கும் பணியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
தூசி,
தூசி அருகே புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் ஆணையர் பொது நல நிதி ரூ.23½ லட்சம் மதிப்பில் தேர் அமைக்கும் பணி தொடக்க விழா நடந்தது. கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன், உதவி ஆணையர் ஜான்சிராணி, ஆய்வாளர் மேகலா, பொறியாளர் ராகவன், தேர் ஸ்தபதி கஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பூஜை செய்து தேர் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள், இந்து சமய அறநிலைய துறை பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆரணி, கொசப்பாளையம், சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் எஸ்.எஸ்.கபடி குழுவின் சார்பில் 4-ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது. சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் ஆரணி, வடுகசாத்து, குடியாத்தம், கொங்கராம்பட்டு, சாத்தனூர், திருவண்ணாமலை, அணைக்கட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம் உள்பட 27 குழுக்கள் பங்கேற்றன. இப்போட்டி இன்றும் (திங்கட்கிழமை) நடக்கிறது.
வெற்றி பெறும் அணிக்கு 8 அடி உயர கோப்பையும், ரொக்கப்பரிசும், 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு 7 அடி உயர கோப்பையும், ரொக்கப்பரிசும், 3-ம் இடம் பிடிக்கும் அணிக்கு 5 அடி உயர கோப்பையும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது. இதேபோல் மொத்தம் 8 பரிசுகள் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, அரசு வக்கீல் கே.சங்கர், மாவட்ட நுகர்பொருள் பண்டகசாலை தலைவர் கஜேந்திரன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் எ.அசோக்குமார், ஆரணி பட்டு கூட்டுறவு சங்க துணைத்தலைவர் அன்பழகன், முன்னாள் நகரசபை உறுப்பினர் லட்சுமிசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story