வேலூரில் மனித சங்கிலி போராட்டம் - சதுப்பேரி ஏரி நீர்வரத்து கால்வாயை சீரமைக்கக்கோரி நடந்தது


வேலூரில் மனித சங்கிலி போராட்டம் - சதுப்பேரி ஏரி நீர்வரத்து கால்வாயை சீரமைக்கக்கோரி நடந்தது
x
தினத்தந்தி 23 Sept 2019 4:00 AM IST (Updated: 22 Sept 2019 11:47 PM IST)
t-max-icont-min-icon

சதுப்பேரி ஏரி நீர்வரத்து கால்வாயை சீரமைக்கக்கோரி வேலூரில் மனிதசங்கிலி போராட்டம் நடந்தது.

வேலூர், 

வேலூர் மாவட்ட பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சதுப்பேரி ஏரி நீர்வரத்து கால்வாயை சீரமைக்கக்கோரி மனிதசங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. கொணவட்டம் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வரை இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கைக்கோர்த்தப்படி வரிசையாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் வேலூர் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சதுப்பேரியின் நீர்வரத்து கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும், விரிஞ்சிபுரம் பாலாற்று பகுதியில் தடுப்பணை கட்டி சதுப்பேரிக்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும், பழுதடைந்துள்ள ஏரி நீர்வரத்து கால்வாய் தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும், சதுப்பேரி ஏரியில் குடிமராமத்து பணி மேற்கொள்ள வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதுகுறித்து பாலாறு பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கத்தினர் கூறுகையில், ‘வேலூர் மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக சதுப்பேரி ஏரி விளங்குகிறது. இந்த ஏரிக்கு பாலாற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. இதற்கான நீர்வரத்து கால்வாய் புதர்மண்டி கிடக்கிறது. அதனை அகற்றி கால்வாயை சீரமைக்க வேண்டும். மேலும் விரிஞ்சிபுரம் பாலாற்று பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும். அப்போது பாலாற்றில் இருந்து ஏரிக்கு தண்ணீர் எளிதாக வரும். மேலும் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் தடுப்புச்சுவர் பழுதடைந்துள்ளது. அதனை சீரமைக்க வேண்டும்.

சதுப்பேரி ஏரி நிரம்பினால் வேலூர் மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. இந்த கோரிக்கைகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்பு நிறைவேற்ற வேண்டும் என்று பொதுப்பணி துறையினரிடமும், மாவட்ட கலெக்டரிடமும் மனுக்கள் அளித்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சதுப்பேரி ஏரி நீர் வரத்து கால்வாயை சீரமைக்கவும், குடிமராமத்து பணி மேற்கொள்ளவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.

Next Story