சோழிங்கநல்லூரில் 20 அடி உயரத்தில் இருந்து கால்வாய்க்குள் பாய்ந்த கார் கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர்


சோழிங்கநல்லூரில் 20 அடி உயரத்தில் இருந்து கால்வாய்க்குள் பாய்ந்த கார் கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 23 Sept 2019 4:00 AM IST (Updated: 23 Sept 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

சோழிங்கநல்லூரில் 20 அடி உயரத்தில் இருந்து கால்வாய்க்குள் கார் பாய்ந்தது. இதில் காரில் இருந்த கல்லூரி மாணவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சோழிங்கநல்லூர்,

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் விறுக்குமார் (வயது 22), அஜய் (22), இவர்கள் இருவரும் விடுதியில் தங்கி சென்னை வடபழனியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் இருவரும் காரில் கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதிக்கு செல்வதற்காக சோழிங்கநல்லூரில் இருந்து இ.சி.ஆர் இணைப்புசாலையில் வந்து கொண்டிருந்தனர். விறுக்குமார் காரை ஓட்டினர். அஜய் காரில் அமர்ந்திருந்தார்.

மதியம் 2 மணியளவில் சாலையின் நடுவில் உள்ள கால்வாயின் மேம்பாலம் அருகில் கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. முன்னால் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதாமல் இருக்க விறுக்குமார் காரை வலதுபக்கம் திருப்பினார். இதில் கார் பக்கவாட்டில் உள்ள பாலங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் சென்று 20 அடி உயரத்தில் இருந்து கால்வாய்க்குள் பாய்ந்தது.

இதில் காருடன் கல்லூரி மாணவர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். கால்வாய் ஆழம் குறைவாக இருந்ததால் சாமர்த்தியமாக கல்லூரி மாணவர்கள் இருவரும் காரின் கதவை திறந்து கொண்டு வெளியேறினர். அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இது குறித்து தகவலறிந்த செம்மஞ்சேரி போக்குவரத்து ஆய்வாளர் ஜெயவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் காரை கிரேன் மூலம் வெளியில் எடுத்தனர்.

Next Story