போலீஸ் என்று கூறி டீக்கடைக்காரர் உள்பட 2 பேரிடம் நகை பறிப்பு - மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்
உடுமலை அருகே போலீஸ் என்று கூறி, டீக்கடைக்காரர் உள்பட 2 பேரிடம் இருந்து பணம் மற்றும் நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உடுமலை,
உடுமலையை அடுத்த கோட்டமங்கலம் அருகில் உள்ள வெள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் திருமலைசாமி(வயது 60). இவர் உடுமலை அருகே கொழுமம் சாலையில் உள்ள மலையாண்டிக்கவுண்டனூரில் டீக்கடை வைத்துள்ளார். இவர் நேற்று உடுமலையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். உடுமலை ஏரிப்பாளையத்தை அடுத்த திருப்பூர் சாலையில் ஒரு பள்ளிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் சாதாரண உடையில் நின்றிருந்த ஒரு மர்ம ஆசாமி கையை காட்டி திருமலைசாமியை நிற்கும்படி கூறினார். இதையடுத்து திருமலைசாமி தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது அந்த ஆசாமி தன்னை போலீஸ் என்று கூறியதோடு, கையில் இப்படி மோதிரம் போட்டுக்கொண்டு செல்லலாமா? மோதிரத்தை கழற்றுங்கள், பத்திரமாக வைத்து தருகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து திருமலைசாமி மோதிரத்தைக்கழற்றி அவரிடம் கொடுத்ததும் அந்த ஆசாமி மோதிரத்தை வாங்கி பத்திரமாக மடித்து தருவது போல் நடித்து மோதிரத்துடன் தப்பி சென்று விட்டார். அப்போதான் அந்த ஆசாமி போலீஸ் என்று கூறி ஏமாற்றி மோதிரத்தை பறித்து சென்றது திருமலைசாமிக்கு தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதேபோல் உடுமலை பெரியார் நகரைச் சேர்ந்தவர் பெரியசாமி(75). வியாபாரி. இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் சாமராயபட்டிக்கு சென்று கொண்டிருந்தார். உடுமலை கொழுமம் சாலையில் எஸ்.வி.புரம் பி.ஏ.பி.வாய்க்கால் பாலத்தை அடுத்து சென்று கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளுடன் நின்றுகொண்டிருந்த ஆசாமி ஒருவர், பெரியசாமியை நிறுத்தியுள்ளார். பின்னர் அவரிடம் அந்த ஆசாமி தான் போலீஸ் என்றும் வாகன சோதனை நடத்துவதற்காக நின்றிருப்பதாகவும் கூறியுள்ளார். பெரியசாமியிடம் அந்த ஆசாமி எங்கு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு கரும்பு கிரசர் பொருள் வாங்குவதற்காக பணம் கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.அதற்கு அந்த ஆசாமி பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லவேண்டும் அதைகொடுங்கள் பத்திரமாக மடித்து தருகிறேன் என்று கூறி பணத்தையும்,அவர் விரலில் போட்டிருந்த மோதிரத்தையும் கேட்டுள்ளார்.அவரது பேச்சை நம்பிய பெரியசாமி தன்னிடம் இருந்த பணம் ரூ.78 ஆயிரம் மற்றும், தான் கையில் போட்டிருந்த அரைப்பவுன் மோதிரம்மற்றும் செல்போன் ஆகியவற்றை அந்த ஆசாமியிடம் கொடுத்துள்ளார். அந்த ஆசாமி அதை கைக்குட்டையில் வைத்து மடிப்பது போல் மடித்து கொடுத்துள்ளார்.அதைவாங்கிகொண்டு சிறிது தூரம் சென்றதும் அதை பிரித்துப் பார்த்த பெரியசாமி அதிர்ச்சியடைந்தார்.அதில் செல்போன் மட்டும் இருந்துள்ளது.பணம் மற்றும் மோதிரம் இல்லை. அப்போதுதான்அந்த ஆசாமி போலீஸ் என்று கூறி, பணம் மற்றும் மோதிரத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இந்தசம்பவங்கள் குறித்து இருவரும் உடுமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உடுமலை அருகே அடுத்தடுத்து நடந்த 2 சம்பவங்களும் ஒரேமாதிரி நடந்துள்ளதால் இரு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே ஆசாமியாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து அந்த ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story