திருப்பூரில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது


திருப்பூரில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2019 4:00 AM IST (Updated: 23 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சிவானந்தாபுரத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 51). இவர் தொழில் தொடங்குவதற்காக தனது நண்பர்களிடம் கடன் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடன் கேட்பதை அறிந்த திருப்பூரை சேர்ந்த செல்வராஜ் (45), தினேஷ் (22) ஆகிய 2 பேர் மூர்த்திக்கு அறிமுகமாகினர். பின்னர் செல்வராஜ் உள்பட 2 பேரும் மூர்த்தியிடம் தனியார் நிறுவனத்தில் உங்களுக்கு நாங்கள் கடன் வாங்கி தருகிறோம் என்றனர்.

கடன் பெறுவதற்காக பல்வேறு சான்றிதழ்களை விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. எனவே சான்றிதழ்கள் ஜெராக்ஸ் எடுக்க வேண்டும். மேலும், பத்திரமும் பதிவு செய்வதற்கு சான்றிதழ்கள் தேவை என்பதால் அதனை தரும்படி கூறியுள்ளனர். இதனை நம்பிய மூர்த்தியும் சான்றிதழ்களை கொடுத்தார். பின்னர் அவர்கள் அனைத்தையும் ஜெராக்ஸ் எடுத்து வைத்துகொண்டனர்.

சில நாட்கள் கழித்து மூர்த்தியை தொடர்புகொண்டவர்கள் பத்திரப்பதிவு செய்ய வேண்டி உள்ளதால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். மேலும், ரூ.15 லட்சம் கடன் கேட்டுள்ளதால், பத்தரப்பதிவுக்கு ரூ.1½ லட்சம் தேவைப்படும். எனவே அதனை கொண்டு வருமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய மூர்த்தி ரூ.1½ லட்சத்தை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது செல்வராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.

மேலும், ஒரு பெண் ஒருவரை பத்திரப்புதிவு அலுவலகத்தில் வேலை செய்து வருவதாக அறிமுகம் செய்துவைத்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணிடம் பணத்தை கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். அவர் உள்ளே பணத்தை கட்டி விடுவார் எனவும் கூறியுள்ளனர். தொடர்ந்து பணத்தை பெற்ற பெண் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அவரை தொடர்ந்து செல்வராஜ் மற்றும் தினேஷ் ஆகியோரும் உள்ளே சென்றனர்.

நீண்ட நேரம் ஆகியும் 3 பேரும் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மூர்த்தி உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு யாரும் இல்லை. மேலும், இது குறித்து அங்குள்ளவர்களிடம் விசாரித்த போது, அவ்வாறு யாரும் இங்கு வேலை செய்யவில்லை எனக்கூறியுள்ளனர்.

இதனால் ரூ.1½ லட்த்தை அவர்கள் மோசடி செய்ததை உணர்ந்த மூர்த்தி இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இதுபோல் நேற்று ஒருவரிடம் கடன் வாங்கி தருவதாகக்கூறி சிலர் சிவன் தியேட்டர் அருகே பேசிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அது மூர்த்தியிடம் கடன் வாங்கி தருவதாக்கூறி ரூ.1½ லட்சத்தை மோசடி செய்த செல்வராஜ் மற்றும் தினேஷ் என்பதும், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து செல்வராஜ், தினேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story