பவானி பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்


பவானி பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 23 Sept 2019 4:00 AM IST (Updated: 23 Sept 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

நூல் விலையை மாதந்தோறும் நிர்ணயிக்கக்கோரி பவானி பகுதியில் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

பவானி, 

பவானி, சித்தோடு, தயிர்பாளையம், பேரோடு, காரப்பாளையம், ஆலுச்சாம்பாளையம், சேவாகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் ரையான் என்ற நூல் ரகம் மூலமாக வேட்டி, சேலை போன்ற துணிகளை விசைத்தறியில் நெய்து வருகிறார்கள். இந்த ரையான் நூல் ஒரு கிலோ ரூ.176-க்கு விற்கப்படுகிறது. ரையான் நூலை உற்பத்தியாளர்கள் முதலில் சைசிங் செய்து அடுத்து பாவாக தயாரிக்கிறார்கள். பின்னர் அதை விசைத்தறியில் போட்டு துணியாக மாற்றும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

இந்த நிலையில் துணி தயாரிக்க பயன்படும் ரையான் நூலின் விலையை மத்திய அரசு 2 நாட்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வருகிறது. இதன் காரணமாக உற்பத்திக்கேற்ற கூலி சரியாக நிர்ணயம் செய்யப்படுவதில்லை. இதனால் ஒரு மீட்டருக்கு ரூ.5 அல்லது ரூ.6 வரை விலை வீழ்ச்சியடைவதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தகோரி தமிழகம் முழுவதும் கடந்த வாரம் விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதில் பவானி பகுதியை சேர்ந்த விசைத்தறி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை. நூல் இருந்ததால் தொடர்ந்து உற்பத்தி பணியை மேற்கொண்டனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் நூல் தீர்ந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் சித்தோட்டில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சங்க தலைவர் ராக்கியண்ணன், பாலசுப்பிரமணியம், பொருளாளர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நூல் விலை உயர்வு 2 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படுவதால் உற்பத்தியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் மாதத்துக்கு ஒருமுறை நூல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஆயிரக்கணக்கான விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் பவானி பகுதியில் செயல்பட்டு வந்த நூற்றுக்கணக்கான விசைத்தறிக்கூடங்கள் மூடப்பட்டன.

Next Story